யாழில் பயணிகளை இடைநடுவே இறக்கி விட்ட பேருந்தின் சாரதி மற்றும் நடத்துநர் பணியிடை நீக்கம்!
சந்நிதி ஆலயத்துக்குச் செல்வதாகக் கூறிப் பயணிகளை ஏற்றிச் சென்று, ஆலயத்துக்குச் செல்லாமல் தொண்டைமானாறு சந்தியில் இறக்கிவிட்ட சம்பவம் தொடர்பில், குறித்த தனியார் பேருந்தின் சாரதியையும் நடத்துநரையும் மூன்று நாள்களுக்குப் பணியிலிருந்து இடைநிறுத்துவதற்கு வடமராட்சி தனியார் பேருந்து உரிமையாளர் சங்கம் – 751, நடவடிக்கை எடுத்துள்ளதாக வடக்கு மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் தலைவர் பொறியியலாளர் சூ.விமலேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
கடந்த 16.10.2026 வெள்ளிக்கிழமை காலை பருத்தித்துறை பேருந்து நிலையத்திலிருந்து முற்பகல் 9.50 மணிச் சேவையில் ஈடுபட்ட சிற்றூர்தியில் பயணித்தவர்கள், சந்நிதி ஆலயத்துக்குச் செல்வதாகக் கூறி ஏற்றப்பட்ட பின்னர், ஆலயத்துக்குச் செல்லாமல் தொண்டைமானாறு சந்தியில் இறக்கிவிடப்பட்டுள்ளனர். இதனைப் பயணி ஒருவர் காணொலியாகப் பதிவு செய்து சமூக ஊடகங்களில் வெளியிட்டதைத் தொடர்ந்து, இச்சம்பவம் பொதுமக்களின் கவனத்தை ஈர்த்தது.
சமூக ஊடகங்களில் வெளியான காணொலி தொடர்பில் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன், வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் கவனத்துக்குக் கொண்டுவந்ததைத் தொடர்ந்து, அதிகார சபையால் உரிய நடவடிக்கை எடுக்குமாறு அறிவுறுத்தப்பட்டது.
இதற்கமைய, வடமராட்சி தனியார் பேருந்து உரிமையாளர் சங்கத்தின் நிர்வாகம் சாரதி மற்றும் நடத்துநர் ஆகியோரிடம் விசாரணை நடத்தியது. தங்களால் தவறு இடம்பெற்றதை ஏற்றுக்கொண்ட இருவரும், இனிமேல் இத்தகைய தவறு இடம்பெறாது எனத் தெரிவித்து மன்னிப்புக் கோரியுள்ளனர். இதனையடுத்து, இருவரையும் மூன்று நாள்களுக்குப் பணியிலிருந்து இடைநிறுத்துவதற்கு சங்கம் தீர்மானித்துள்ளதாக அதிகார சபையின் தலைவர் தெரிவித்தார்.
பொதுப் போக்குவரத்துச் சேவையில் ஈடுபடுவோர் பயணிகளுக்கான சேவையைப் பொறுப்புடனும் நேர்மையுடனும் வழங்க வேண்டும். பயணிகள் செல்ல வேண்டிய இடத்துக்குப் பாதுகாப்பாகவும் உரிய முறையிலும் சென்றடைவதை உறுதிப்படுத்துவது சாரதிகள் மற்றும் நடத்துநர்களின் கடமையாகும். இத்தகைய சம்பவங்கள் மீண்டும் இடம்பெறாத வகையில் அனைவரும் தமது பொறுப்புகளை உணர்ந்து செயற்பட வேண்டும் என்றும் அதிகார சபையின் தலைவர் வலியுறுத்தினார்.
பேருந்துச் சேவைகளில் ஏற்படும் குறைபாடுகள், சாரதிகள் மற்றும் நடத்துநர்களின் ஒழுங்கீனமான செயற்பாடுகள், பயணிகள் எதிர்கொள்ளும் சிரமங்கள் தொடர்பில் பொதுமக்கள் வடக்கு மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் முறைப்பாட்டு வட்ஸ்அப் இலக்கமான 071 9090900 ஊடாகத் தமது முறைப்பாடுகளைத் தெரிவிக்கலாம்.

