உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
14 திங்கள்

கிளிநொச்சியில் சேகரிக்கப்பட்டுள்ள மணலை உரிய அனுமதிகளுடன் பொதுமக்களுக்கு விநியோகிக்கத் தீர்மானம்

இலங்கை செய்திகள் 4 வாரங்கள் முன்
142 பார்வைகள்

கிளிநொச்சி மாவட்டத்தில் ஏற்கனவே சேகரிக்கப்பட்டுள்ள மணலை அடுத்த வாரம் முதல் உரிய அனுமதிகளுடன் பொதுமக்களுக்குத் துரிதமாக விநியோகிப்பதற்கும், இரணைமடுக்குளம் உள்ளிட்ட பகுதிகளில் மேலும் சில இடங்களில் மண்ணைக் கழுவி மணல் பெற்றுக்கொள்ளும் பணிகளுக்கான கேள்விக் கோரலை விரைவாக மேற்கொள்வதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தலைமையில் கிளிநொச்சி மாவட்டத்தில் மணல் மற்றும் கிரவல் அகழ்வு, விநியோகம் தொடர்பான விசேட கலந்துரையாடல் இன்று (18.08.2026) செவ்வாய்க்கிழமை மாலை நடைபெற்றபோதே இந்தத் தீர்மானங்கள் எடுக்கப்பட்டன.

கலந்துரையாடலின் ஆரம்பத்தில் கருத்துத் தெரிவித்த கிளிநொச்சி மாவட்டச் செயலாளர் சு.முரளிதரன், இரணைமடு நீர்வழிந்தோடும் பகுதிகளில் ஏற்கனவே சேகரிக்கப்பட்டுள்ள மணல், கழுவி எடுக்கப்பட்ட மணல் மற்றும் கிரவல் ஆகியவற்றை முறையாக விநியோகிப்பது தொடர்பில் ஆராய்வதற்காக இக்கலந்துரையாடல் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

வீட்டுத் திட்டங்கள் உள்ளிட்ட அரசாங்கத்தின் பல்வேறு அபிவிருத்தித் திட்டங்களை எதிர்வரும் ஒக்ரோபர் மாதத்துக்குள் நிறைவு செய்ய வேண்டிய நிலை இருப்பதால், கட்டுமானத் தேவைகளுக்கான மணல் மற்றும் கிரவல் தடையின்றிக் கிடைப்பது அவசியமானது எனவும் அவர் சுட்டிக்காட்டினார். மேலும், கிளிநொச்சி மாவட்ட பாரவூர்தி உரிமையாளர் சங்கத்தால் மணல் விநியோகத்துக்கான அனுமதி கோரப்பட்டுள்ளமை மற்றும் கழுவி எடுக்கப்படும் மணலை முறையாக விநியோகிப்பதற்கான பொறிமுறை ஒன்றை உருவாக்க வேண்டிய அவசியம் தொடர்பிலும் அவர் எடுத்துரைத்தார்.

இதன்போது உரையாற்றிய ஆளுநர், வடக்கு மாகாணத்தில் மாகாணத் திணைக்களங்கள் மற்றும் மத்திய அரசாங்கத் திணைக்களங்கள் ஊடாக பல்வேறு அபிவிருத்தி மற்றும் அரசாங்க வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அவற்றை நடைமுறைப்படுத்துவதற்குத் தேவையான மணலைப் பெற்றுக்கொள்வதில் பெரும் சிரமங்கள் நிலவுகின்றன எனத் தெரிவித்தார்.

‘மக்களுக்குத் தேவையான மணலை அவர்கள் எளிதாகப் பெற்றுக்கொள்ள முடியாத நிலை உருவாகியுள்ளது. அதிகரித்துள்ள விலை காரணமாக சாதாரண மக்கள் பெரும் சிரமங்களை எதிர்கொள்கின்றனர். இந்த நிலைமையைச் சீர்செய்து, குறைந்த விலையில் மக்களுக்குத் தேவையான மணலை வழங்குவதற்கான ஒரு முறையான பொறிமுறையை உருவாக்குவதற்காக கடந்த ஐந்து மாதங்களாக பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றோம்’ என ஆளுநர் தெரிவித்தார்.

மணல் விநியோகத்தில் ஏற்பட்டுள்ள தாமதம் மக்கள் மத்தியில் கோபம், ஏமாற்றம் மற்றும் விரக்தியை ஏற்படுத்தியுள்ளதாகவும், ‘கூட்டங்கள் நடத்தப்படுகின்றன் ஆனால் மக்களுக்குத் தேவையான மணல் கிடைக்கவில்லை’ என்ற குற்றச்சாட்டு தொடர்ச்சியாக முன்வைக்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

அதேவேளை, அரச திணைக்களங்களுக்கு பல சந்தர்ப்பங்களில் வழங்கப்பட்டுள்ள தெளிவான அறிவுறுத்தல்கள் நடைமுறைப்படுத்தப்படுவதில் தேவையற்ற தாமதங்கள் ஏற்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். அரச நிறுவனங்கள் சட்டரீதியான அனுமதிகளைப் பெறுவதற்காக அணுகும் போது செயன்முறைகள் நீடிக்கப்படுகின்ற நிலையில், தனிநபர்களுக்கு அதே திணைக்களங்களால் அனுமதிகள் விரைந்து வழங்கப்படுகின்றனவா என்ற கேள்வியும் எழுவதாக அவர் குறிப்பிட்டார்.

‘மக்களின் தேவையை நிறைவேற்றுவதற்காக நாங்கள் தொடர்ச்சியாக கூட்டங்களை நடத்தி, இறுக்கமான அறிவுறுத்தல்களை வழங்கி வருகின்றோம். ஆனால் அவை நடைமுறைக்கு வருவதில் தாமதம் ஏற்படுகின்றது. அதேவேளை தனியார் தரப்பினருக்கு விரைந்து அனுமதிகள் வழங்கப்படுகின்ற நிலை ஏற்பட்டால், இது வெறும் நிர்வாகத் தாமதமாக மட்டும் பார்க்க முடியாத நிலையை உருவாக்குகின்றது. இத்தகைய செயற்பாடுகள் இந்த அரசாங்கத்தின் நற்பெயரைப் பாதிக்கும் வகையில் இடம்பெறும் சதிவேலையா என்ற சந்தேகத்தையும் மக்கள் மத்தியில் ஏற்படுத்துகின்றன’ என ஆளுநர் தெரிவித்தார்.

அதேவேளை, கைத்தொழில் மற்றும் தொழில்முயற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சால் கனியவளங்களின் அகழ்வு மற்றும் விநியோகம் தொடர்பாக புதிய சுற்றறிக்கை வரைவு வெளியிடப்பட்டுள்ளதாகவும் ஆளுநர் தெரிவித்தார். அதன் பிரகாரம், மாவட்டச் செயலாளரின் தலைமையில் அமைக்கப்படும் மாவட்டக் குழுவின் ஊடாக கனியவளங்கள் தொடர்பான தீர்மானங்களை மேற்கொள்ளும் நடைமுறை வலுப்பெறும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

கலந்துரையாடலின் போது, கனகராயன் ஆற்று பகுதியில் ஏற்கனவே அள்ளிக் குவிக்கப்பட்டுள்ள மணலைத் துரிதமாக விநியோகிப்பது தொடர்பில் முதற்கட்டமாக ஆராயப்பட்டது. அதற்கான அனுமதிகளை வழங்குவதில் காணப்பட்ட இடையூறுகள் தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டதுடன், உரிய சட்டரீதியான அனுமதிகளைப் பெற்று, கிளிநொச்சி மாவட்ட பாரவூர்தி உரிமையாளர் சங்கத்தின் ஊடாக அடுத்த வாரம் முதல் மணலை விநியோகிப்பதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ளத் தீர்மானிக்கப்பட்டது.

அத்துடன், குளங்களில் இருந்து மண் அகழ்ந்து கழுவும் செயன்முறை மூலம் பெறப்படும் மணலை விநியோகிப்பதற்கான நடவடிக்கைகள் தொடர்பிலும் விரிவாகக் கலந்துரையாடப்பட்டது. இதற்குத் தேவையான அனுமதிகளைப் பெற்றுக்கொள்ளும் வகையில் சம்பந்தப்பட்ட திணைக்களங்கள் விரைந்து கடிதங்களை வழங்குமாறு அறிவுறுத்தப்பட்டதுடன், அடுத்த மாத இறுதிக்குள் கழுவி எடுக்கப்பட்ட மணலை விநியோகித்து முடிக்க வேண்டியதன் அவசியமும் வலியுறுத்தப்பட்டது.

கல்மடுக்குளத்தில் இருந்து மண்ணைக் கழுவும் செயன்முறை இதுவரை ஆரம்பிக்கப்படாதமை தொடர்பில் ஆளுநர் கேள்வி எழுப்பியதுடன், அதனைத் தாமதமின்றி ஆரம்பிக்குமாறும் பணிப்புரை வழங்கினார். இதேபோன்று, ஏற்கனவே அனுமதி வழங்கப்பட்டுள்ள சில குளங்களில் மண் கழுவும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படாதமை தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டு, அவற்றையும் உடனடியாக ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது.

மேலும், இரணைமடுக்குளத்தில் மண் கழுவும் செயன்முறையை முன்னெடுக்கக்கூடிய மேலும் சில இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், அவற்றுக்கான கேள்விக் கோரலை விரைந்து மேற்கொள்ளவும் தீர்மானிக்கப்பட்டது. இதற்கு மேலதிகமாக, மேலும் இரு இடங்களில் ஆற்றுப்படுக்கைகள் மற்றும் நீர்வழிந்தோடும் வாய்க்கால்களைத் துப்புரவு செய்வதற்காக அகழப்படும் மண்ணைக் கழுவி மணல் பெற்றுக்கொள்ளும் பணிக்கான கேள்விக் கோரலையும் விரைவாக மேற்கொள்ள இக்கலந்துரையாடலில் தீர்மானிக்கப்பட்டது.

மக்களுக்குத் தேவையான மணலை நியாயமான விலையில், தடையின்றி விநியோகிப்பது ஒரு நிறுவனத்தின் அல்லது ஒரு சில அதிகாரிகளின் பொறுப்பு மட்டுமல்ல என வலியுறுத்திய ஆளுநர், இச்செயன்முறையில் பங்கேற்கும் ஒவ்வொரு திணைக்களத்துக்கும் பொதுமக்களுக்கான சமூகப் பொறுப்பு இருப்பதாகவும் தெரிவித்தார். சட்டரீதியான நடைமுறைகளைப் பின்பற்றியபடியே, மக்களின் தேவையை முன்னுரிமைப்படுத்தி தாமதமின்றி நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் எனவும் அவர் அறிவுறுத்தினார்.

இக்கலந்துரையாடலில் கிளிநொச்சி மாவட்டச் செயலாளர், தூய்மை இலங்கை செயலணியின் மாவட்ட இணைப்பாளர், மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவரின் இணைப்பாளர், பிரதேச சபைகளின் கௌரவ தவிசாளர்கள், மாவட்டச் செயலக திட்டமிடல் பணிப்பாளர், கணக்காளர், வடக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர், கிளிநொச்சி மாவட்ட உள்ளூராட்சி உதவி ஆணையாளர், பிரதேச செயலாளர்கள், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர், மத்திய சுற்றாடல் அதிகார சபை அதிகாரிகள், புவிச்சரிதவியல் அளவை மற்றும் சுரங்கப் பணியகத்தின் பொறியியலாளர், பிரதேச சபைகளின் செயலாளர்கள், நீர்ப்பாசனத் திணைக்களப் பொறியியலாளர்கள், ஒப்பந்தகாரர்கள், பாரவூர்தி உரிமையாளர் சங்கப் பிரதிநிதிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் கலந்துகொண்டனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

‘எமது திருடன் – எமக்கு நல்லம்’ எனக் கூறி ஊழல்வாதிகள் பேரணி செல்வது கீழ்த்தரமான அரசியல் கலாச்சாரம்.!

“அனுராதபுரத்தில் எதிர்க்கட்சியின் கூட்டத்துக்கு வந்தவர்கள் ‘எமது திருடன் – எமக்கு நல்லம்’ என்று குறிப்பிட்டுக் கொண்டு பேரணியாக செல்கின்றார்கள். இதுதான் கீழ்த்தரமான கலாச்சாரம். எமது ஆட்சியில் இலஞ்ச,…

40 0 0
இலங்கை செய்திகள்

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவினரின் பேரணிகளால் அரசுக்கு எந்தச் சவாலும் இல்லை.!

“ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டு வரும் மக்கள் பேரணிகள் மற்றும் அரசியல் கூட்டங்கள் அரசுக்கோ அல்லது தேசிய மக்கள் சக்திக்கோ எந்தவிதமான அரசியல் சவாலையும்…

37 0 0
இலங்கை செய்திகள்

சந்தர்ப்பவாத அரசியலுக்காகவே மீண்டும் மஹிந்தவிடம் விமல் வீரவன்ச, உதய கம்மன்பில தஞ்சம்.!

“கடந்த காலங்களில் ராஜபக்ஷக்களுடன் முரண்பட்டுக் கொண்டிருந்த விமல் வீரவன்ச, உதய கம்மன்பில போன்றோரும் தற்போது மீண்டும் மஹிந்தவிடம் தஞ்சமடைந்துள்ளனர். இவர்களின் அரசியல் கலாச்சாரம் இதுவேயாகும்” என்று தொழில்…

29 0 0
இலங்கை செய்திகள்

தெஹிவளை தாக்குதல் பின்னணி பற்றி வார இறுதியில் உண்மை வெளிவரும்.!

கொழும்பு, தெஹிவளையில் நடத்தப்பட்ட கைக்குண்டுத் தாக்குதல் சம்பவமானது ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச்செயல்களின் அதிகரிப்பைக் காட்டுகின்றது என்ற கருத்தைத் தாம் முழுமையாக நிராகரிக்கின்றார் என்று பொதுமக்கள் பாதுகாப்புப் பிரதி அமைச்சர்…

27 0 0