குருவிட்ட சிறைச்சாலை மோதல் : இருவர் பலி!
இரத்தினபுரி குருவிட்ட சிறைச்சாலைக்குள் இன்று (7) காலை இடம்பெற்ற மோதலில் 2 பேர் பலியான நிலையில் 4 கைதிகள் காயமடைந்துள்ளனர்.
நேற்றிரவு குறித்த சிறைச்சாலையில் பதற்ற நிலையில் ஏற்பட்ட நிலையில் அது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
எனினும் இன்று (7) காலை மீண்டும் அந்த சிறைச்சாலைக்குள் கைதிகளால் பதற்ற நிலை உருவானதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்காக பொலிஸாரினால் கண்ணீர்புகை பிரயோகம் நடத்தப்பட்டது.
இந்நிலையில் குறித்த சம்பவத்தில் 4 கைதிகள் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கொழும்பு புதிய மெகசின் சிறைச்சாலையில் நேற்று (07) இரவில் ஏற்பட்ட அமைதியின்மை காரணமாக 11 கைதிகள் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளர் ஏ.சி. கஜநாயக்க தெரிவித்துள்ளார்.
தற்போது அங்கு நிலைமை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாகவும், ஒன்பது கைதிகளை வேறு சிறைச்சாலைகளுக்கு மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
தற்போது சிறைச்சாலையின் பாதுகாப்பிற்காக பொலிஸார், பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் மற்றும் முப்படையினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகக் கூறிய அவர், நேற்று ஏற்பட்ட சூழ்நிலையைக் கட்டுப்படுத்துவதற்கும் முப்படை அதிகாரிகளின் ஒத்துழைப்பு பெறப்பட்டதாகக் குறிப்பிட்டார்.
மேலும், தற்போது ஏற்பட்டுள்ள நிலைமை குறித்து மேலதிக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இதனிடையே, உருவாகியுள்ள சூழ்நிலையைக் கருத்திற்கொண்டு, இன்றைய தினம் சிறைச்சாலையில் கைதிகளை பார்வையிட சந்தர்ப்பம் வழங்கப்படமாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது.