பெர்லின் தாக்குதலுடன் தொடர்புடைய சந்தேகநபர் பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழப்பு!
ஜேர்மனியின் பெர்லின் நகரில் நடைபெற்ற பிரைட் (Pride) பேரணியின் மீது தாக்குதல் நடத்திய சந்தேகநபர், பொலீசாரின் தேடுதல் நடவடிக்கையின் போது துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்துள்ளதாக ஜேர்மன் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மேற்கு பெர்லினிலுள்ள ஸ்பாண்டாவ் (Spandau) பகுதியில் அமைந்துள்ள தோட்டம் ஒன்றில் மேற்கொள்ளப்பட்ட காவல்துறை நடவடிக்கையின் போதே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
முன்னதாக அப்துல் பலூத் (Abdul Ballout) என்ற 21 வயதுடைய இந்த இளைஞர், மக்கள் கூட்ட நெரிசலுக்குள் வாகனத்தை செலுத்தியதுடன், கத்தியால் பலரைக் குத்தியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இந்த தாக்குதலில் பெண் ஒருவர் உயிரிழந்ததுடன், குறைந்தது 29 பேர் காயமடைந்தனர்.
லெபனான் பின்னணியைக் கொண்ட ஜேர்மன் பிரஜையான இவர், ஏற்கனவே குற்றப் பின்னணி கொண்டவர் என்பதோடு, ஐஎஸ் தீவிரவாத அமைப்பில் இணைய முயன்றவர் என்பதும் தெரியவந்துள்ளது.
இந்த தாக்குதலைத் தொடர்ந்து நாட்டின் பாதுகாப்பு அச்சுறுத்தல் மட்டம் உயர்த்தப்பட்டுள்ளதாக அறிவித்துள்ள ஜேர்மனியின் உள்துறை அமைச்சர், “இதேபோன்ற தாக்குதல்கள் மீண்டும் தொடர்வதற்கான வாய்ப்புகளை நிராகரிக்க முடியாது” என எச்சரிக்கை விடுத்துள்ளார்.
பிரமாண்டமானதொரு கொண்டாட்டத்தின் மகிழ்ச்சியோடு விடிய வேண்டிய பெர்லின் நகரம், மற்றொரு கொடூரத் தாக்குதலின் அதிர்ச்சியோடும் சோகத்தோடும் விடிந்துள்ளதாக அந்த நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.