சமஷ்டியைத் தருவதாகக் கூறி ஜனாதிபதி தமிழ் மக்களின் ஆதரவைப் பெறவில்லை!
சமஷ்டியைத் தருவதாகக் கூறி தமிழ் மக்களின் ஆதரவை ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க பெறவில்லை எனவும், மாறாக அவர் நேர்மையாகச் செயற்பட்டதன் அடிப்படையிலேயே மக்கள் அவரை ஆதரித்துள்ளனர் எனவும் பாதுகாப்புப் பிரதி அமைச்சர் அருண ஜயசேகர தெரிவித்தார்.
ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது,
“ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான அரசுக்கு நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மைப் பலம் இருந்தாலும், அரசு எப்போதும் ஜனநாயக அம்சங்களின் அடிப்படையிலேயே செயற்பட்டு வருகின்றது.
மூன்றில் இரண்டு பெரும்பான்மைப் பலம் உள்ள நிலையில், குற்றவாளிகளுக்கு எதிராக ஏன் விரைவாக நடவடிக்கை எடுக்கவில்லை எனச் சிலர் கேள்வி எழுப்புகின்றனர். எனினும், அனைத்து நடவடிக்கைகளும் சட்டபூர்வமான முறையிலேயே இடம்பெறுவதால் சில தாமதங்கள் ஏற்படக்கூடும்.
கடந்த மார்ச் மாதம் ஜனாதிபதி யாழ்ப்பாணம் சென்றபோது, அங்குள்ள மக்கள் அவருக்கு உற்சாகமான வரவேற்பை அளித்தமையுடன் அவரை ஆரத்தழுவி வரவேற்றனர்.
13ஆவது திருத்தத்தைத் தருகின்றோம், சமஷ்டி தருகின்றோம் என்றெல்லாம் வாக்குறுதி அளித்து ஜனாதிபதி மக்களின் ஆதரவைப் பெறவில்லை. வடக்கில் ஒரு பேச்சும், தெற்கில் வேறு பேச்சும் பேசும் அரசியல் கலாசாரம் அவரிடம் கிடையாது. உண்மையின் அடிப்படையில் செயற்படுவதாலும், அவரது நேர்மை மற்றும் வெளிப்படைத்தன்மையாலுமே மக்கள் அவரை ஆதரிக்கின்றனர். அதுமட்டுமன்றி, மலையகம் மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் ஜனாதிபதிக்கு மக்கள் தொடர்ந்து தமது வலுவான ஆதரவை வழங்கி வருகின்றனர்.” – என்றார்.