ஆந்திராவில் மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச பேருந்து பயண திட்டம்.!
ஆந்திர மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு நேற்று மாநிலம் முழுவதும் மாற்றுத்திறனாளிகளுக்கான இலவச அரசுப் பேருந்து பயண திட்டத்தை தொடங்கி வைத்தார். குண்டூர் மாவட்டம், மங்களகிரி பேருந்து நிலையத்தில் நடைபெற்ற தொடக்க நிகழ்ச்சியில் முதல்வர் மாற்றுத்திறனாளிகளுடன் நேரடியாக பேருந்தில் பயணம் செய்து திட்டத்தை அறிமுகப்படுத்தினார்.
முக்கியமாக, கடந்த ஆட்சியில் தலா ரூ.500 நிதி உதவி வழங்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு தற்போதைய ஆட்சியில் தலா ரூ.6 ஆயிரம் வழங்கப்படுகிறது. முதல்வர் தெரிவித்ததாவது, இந்த “மாற்றுத்திறனாளிகளின் சக்தி” திட்டம் மூலம் மாநிலத்தில் 12.5 லட்சம் பேர் பயனடைவார்கள் மற்றும் அவர்கள் 5 வகை பேருந்துகளில் பயணம் செய்யலாம்.
இதற்கு முன்னதாக, ஆந்திராவில் ‘சூப்பர் சிக்ஸ்’ திட்டத்தின் கீழ் முதியோர்களுக்கு தலா ரூ.4 ஆயிரம், சர்க்கரை நோய், எய்ட்ஸ் போன்ற நோய்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தலா ரூ.10 ஆயிரம், மற்றும் வறுமைக்கோட்டில்உள்ள குடும்பங்களுக்கு ஆண்டுக்கு 3 சிலிண்டர்கள் இலவசமாக வழங்கப்படுகிறது.
பெண்களுக்கு இலவச பேருந்து பயணத் திட்டமும், அண்ணா கேன்டீன்களில் ரூ.5க்கு சிற்றுண்டி, மதிய உணவு மற்றும் இரவு உணவு வழங்கலும் உண்டு.துணை முதல்வர் பவன் கல்யாண் மற்றும் சில அமைச்சர்கள் லோகேஷ் உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.