வருமான வரித்துறை அதிகாரியிடம் ரூ.20 லட்சம் ஏமாற்றிய கிளி ஜோசியர்.!
பெங்களூருவில் வருமான வரித்துறை அதிகாரியை இலக்காகக் கொண்டு கிளி ஜோசியம் பெயரில் கோடிக்கணக்கான மதிப்புள்ள பணம் மற்றும் நகைகளை மோசடி செய்த நபர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.பாரதி நகரைச் சேர்ந்த 55 வயதான அதிகாரி ஒருவர் அளித்த புகாரின் படி, கடந்த டிசம்பர் மாதம் அறிமுகமான கிளி ஜோசியர், பதவி உயர்வு மற்றும் பணியிட மாற்றம் கிடைக்க சிறப்பு யாகம் நடத்த வேண்டும் என கூறி முதலில் 50 ஆயிரம் ரூபாய் பெற்றுள்ளார்.
பின்னர் வீட்டிலுள்ள பணம், தங்கம், வெள்ளிப் பொருட்களுடன் யாகம் நடத்தினால் செல்வம் அதிகரிக்கும் என நம்ப வைத்து, ரூ.20.55 லட்சம் பணம், 193 கிராம் தங்க நகைகள் மற்றும் 1.3 கிலோ வெள்ளிப் பொருட்களை பெற்றுக்கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.
பூஜை முடிந்த பின் பொருட்களை திருப்பித் தருவதாக கூறிய அவர், பின்னர் தப்பிச் சென்றுள்ளார்.
இதனைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், தினமும் ரயிலில் வந்து கிளி ஜோசியம் பார்த்து வந்த தமிழ்நாட்டைச் சேர்ந்த நபர்என தெரியவந்தது.
பொலிஸார் திட்டமிட்டு அவரை மீண்டும் பெங்களூருவுக்கு வரவழைத்து கைது செய்துள்ளனர். சந்தேகநபரிடமிருந்து ரூ.12 லட்சம் பணமும் 147 கிராம் தங்க நகைகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. அவருக்கு எதிராக பல பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.