மேகாலயாவில் தேர்தல் பதற்றம்: கலவரத்தில் 2 பேர் உயிரிழப்பு.!
இந்தியாவின் மேகாலயா மாநிலத்தில் ‘கேரோ ஹில்ஸ் தன்னாட்சி மாவட்டக் கவுன்சில்’ தேர்தல் எதிர்வரும் ஏப்ரல் 10 ஆம் திகதி நடைபெறவுள்ளது. இதற்கான வேட்புமனுத் தாக்கல் கடந்த வாரம் தொடங்கிய நிலையில், வேட்பாளர்கள் பழங்குடியினத்தைச் சேர்ந்தவர்கள் என்பதற்கான சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டது.
இந்த முடிவை கேரோ பழங்குடியினர் அமைப்புகள் வரவேற்றாலும், பழங்குடியினர் அல்லாத சில அரசியல் தலைவர்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.இந்நிலையில், துரா பகுதியில் அமைந்துள்ள துணை ஆணையர் அலுவலகத்தை போராட்டக்காரர்கள் முற்றுகையிட்டதைத் தொடர்ந்து அங்கு பதற்றமான நிலை உருவானது.
நிலைமை கட்டுக்கடங்காமல் கலவரமாக மாறியதால் இரவு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. எனினும் தடையை மீறி பலர் இரவு முழுவதும் கலவரத்தில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்படுகிறது.போராட்டக்காரர்களை கலைக்க பொலிஸார் செவ்வாய்க்கிழமை அதிகாலை துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 2 பேர் உயிரிழந்துள்ளனர். சம்பவத்தையடுத்து அந்தப் பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதுடன், இராணுவமும் குவிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.