டிசம்பருக்குள் ஹைதராபாத்தில் டீசல் பேருந்துகள் நீக்கம் – தெலங்கானா முதல்வர் தகவல்.!
தெலங்கானா மாநில தலைநகர் ஹைதராபாத்தில் வரும் டிசம்பர் மாதத்திற்குள் டீசல் பேருந்துகள் இயங்காது என மாநில முதல்வர் ரேவந்த் ரெட்டி தெரிவித்துள்ளார்.சர்வதேச பெண்கள் தினத்தை முன்னிட்டு பெண் பத்திரிகையாளர்களுடன் நடைபெற்ற சந்திப்பில் அவர் இதனை கூறினார். தேர்தல் காலத்தில் கல்லூரி மாணவர்களுக்கு மின்சார ஸ்கூட்டர்கள் வழங்குவதாக வாக்குறுதி அளித்திருந்தோம். ஆனால் அது இந்த நிதியாண்டில் நடைமுறைக்கு வர வாய்ப்பு இல்லை என்றும், இருப்பினும் அந்த திட்டம் அரசின் பரிசீலனையில் உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
.
ஹைதராபாத் நகரை மாசற்ற நகரமாக மாற்றும் நோக்கில், தற்போது இயங்கும் சுமார் 2,800 டீசல் பேருந்துகளுக்கு பதிலாக மின்சார குளிர்சாதன பேருந்துகள் அறிமுகப்படுத்தப்பட்டு வருவதாகவும் கூறினார். இந்த ஆண்டின் டிசம்பர் 9ஆம் தேதிக்குள் நகரத்தில் டீசல் பேருந்துகள் முற்றிலும் நீக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
மேலும், சுமார் 2 லட்சம் டீசல் ஆட்டோக்களுக்கு மாற்றாகமின்சார வாகனங்கள் அறிமுகப்படுத்தப்படும் என்றும், மின்சார வாகனங்களுக்கு தெலங்கானா அரசு எந்த வரியும் விதிக்காது என்றும் அவர் கூறினார்.
அதோடு, ஹைதராபாத் நகரில் ஒருமுறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிப்பது குறித்தும் அரசு பரிசீலித்து வருவதாக முதல்வர் தெரிவித்தார்.