சென்னை மாநகராட்சி ஒப்பந்தங்களில் ‘விஞ்ஞான ஊழல்’ – அன்புமணி குற்றச்சாட்டு.!
அன்புமணி ராமதாஸ், பாட்டாளி மக்கள் கட்சி தலைவர், திராவிட முன்னேற்றக் கழகம் தலைமையிலான அரசை கடுமையாக விமர்சித்துள்ளார். சென்னை மாநகராட்சியில் கட்டுமானப் பணிகளுக்கான ஒப்பந்தங்கள் வழங்குவதில் “விஞ்ஞானப்பூர்வமான ஊழல்” நடைபெறுவதாக அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
இது தொடர்பாக நேற்று வெளியிட்ட அறிக்கையில், மாநகராட்சி சார்பில் வழங்கப்படும் கட்டுமானப் பணிகளுக்கான இ-டெண்டர் முறையில், ஒப்பந்ததாரர்கள் தொழில்நுட்ப ஆவணங்களுடன் கள ஆய்வுச் சான்றிதழையும் கட்டாயமாக பதிவேற்ற வேண்டும் என்ற நடைமுறை கடந்த இரண்டு ஆண்டுகளாக அமலில் உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
மாநகராட்சி செயற்பொறியாளர் வழங்கும் கள ஆய்வுச் சான்றிதழ் அனைவருக்கும் வழங்கப்படுவதில்லை என்றும், ஆட்சி தரப்பு விரும்பும் நிறுவனங்களுக்கு மட்டுமே இச்சான்றிதழ் வழங்கப்படுவதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார். இந்தச் சான்றிதழ் இல்லாத நிறுவனங்கள் தொழில்நுட்பத் தகுதி சுற்றிலேயே நீக்கப்படுகின்றன; அதன் பின்னர் ஆட்சி தரப்புக்கு ஆதரவான நிறுவனங்களுக்கு ஒப்பந்தங்கள் வழங்கப்படுகின்றன என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
ஊழலைத் தடுப்பதற்காக அறிமுகப்படுத்தப்பட்ட இ-டெண்டர் போன்ற வெளிப்படைத்தன்மை நடைமுறைகளிலும் ஊழல் வழிமுறைகள் புகுத்தப்பட்டுள்ளன என்பது இதன் மூலம் வெளிப்படுவதாக அவர் விமர்சித்துள்ளார்.மேலும், மணல் கொள்ளை, கனிமவள முறைகேடு, பணி நியமனநியமன ஊழல் உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகள் திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சிக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ளன என்றும், ரூ.6 இலட்சம் கோடிக்கு மேற்பட்ட அளவில் ஊழல் நடைபெற்றதாக கூறப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஆட்சி அதிகாரத்தை பயன்படுத்தி சட்டரீதியான சிக்கல்களிலிருந்து தப்பிக்கலாம்; ஆனால் சட்டப்பேரவைத் தேர்தலில் மக்கள் வழங்கும் தீர்ப்பிலிருந்து தப்ப முடியாது என்றும் அவர் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.