நியாயமான தீர்ப்புகளை வழங்கினால் மட்டுமே நீதிமன்றங்கள் மீது நம்பிக்கை கூடும்” – உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூர்ய காந்த்.!
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூர்ய காந்த் நேற்று முன்தினம் இரவு திருமலைக்கு வருகை தந்தார். அவரை திருமலை திருப்பதி தேவஸ்தானம் அறங்காவலர் குழுத் தலைவர் பி.ஆர். நாயுடு மற்றும் நிர்வாக அதிகாரி எம். ரவிச்சந்திரா உள்ளிட்டோர் வரவேற்றனர்.
திருமலையில் தங்கியிருந்த தலைமை நீதிபதி, நேற்று காலை தனது குடும்பத்தாருடன் திருப்பதியில் உள்ள திருப்பதி ஏழுமலையான் கோயில்க்கு சென்று ஏழுமலையானை தரிசனம் செய்தார்.
தரிசனத்திற்குப் பிறகு, ரங்கநாயக மண்டபத்தில் அவருக்கு சேஷ வஸ்திரம் அணிவிக்கப்பட்டு, வேத பண்டிதர்கள் ஆசீர்வாதம் வழங்கினர். பின்னர் தீர்த்தப் பிரசாதங்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டது.இந்நிகழ்ச்சியில் தேவஸ்தான அதிகாரிகள் மற்றும் உயர் நீதிமன்ற, மாவட்ட நீதிபதிகள் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து, திருப்பதி மாவட்டம் தாமினேடு பகுதியில் புதிதாக அமைக்கப்படவுள்ள 16 கட்டிடங்களைக் கொண்ட புதிய மாவட்ட நீதிமன்ற வளாகத்துக்கு தலைமை நீதிபதி சூர்ய காந்த் அடிக்கல் நாட்டினார்.அப்போது உரையாற்றிய அவர், நீதிமன்றங்களில் இரு தரப்பினரின் வாதங்களும் முறையாக இடம்பெற வேண்டும் என்றும், அவ்வாறு நடந்தால் மட்டுமே நீதிபதிகள் நியாயமான தீர்ப்பை வழங்க முடியும் என்றும் தெரிவித்தார்.
நியாயமான தீர்ப்புகள் வழங்கப்படும் போது மக்களுக்கு சட்டம் மற்றும் நீதித்துறையின் மீது நம்பிக்கை வலுப்படும் என்றும் அவர் கூறினார்.இந்த நிகழ்ச்சியில் ஆந்திர உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி தீரஜ் சிங் தாக்குர் உள்ளிட்ட நீதிபதிகள், வழக்கறிஞர்கள் பலரும் கலந்து கொண்டனர்.