லக்னோ பல்கலை வளாகத்தில் மசூதி மூடலுக்கு எதிர்ப்பு – மாணவர்கள் போராட்டம் தீவிரம்.!
லக்னோ மாவட்ட தலைநகரில் உள்ள லக்னோ பல்கலைக்கழக வளாகத்தில் அமைந்துள்ள 1800 ஆம் ஆண்டு நசிருதீன் ஹைதர் கட்டிய பாராதாரி கட்டிடம் தொடர்பான விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதனை சில முஸ்லிம் மாணவர்கள் மசூதியாக கருதி தொழுகை நடத்தி வந்த நிலையில், கட்டிடம் இடியும் நிலையில் இருப்பதாக கூறி பிப்ரவரி 23 ஆம் திகதி லக்னோ மாநகராட்சி அதனை மூடியது.
அதே பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள மற்றொரு மசூதியில் தொழுகை நடத்துமாறு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து முஸ்லிம் மாணவர்கள் வளாகத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளனர். தடையை மீறி தொழுகை நடத்தியதாக 13 மாணவர்கள் மீது பொது அமைதிக்கு பங்கம் விளைவித்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து போராட்டம் மேலும் தீவிரமடைந்துள்ளது. மாணவர்களுக்கு எதிராக இந்துத்துவ ஆதரவு மாணவர் அமைப்புகளும் எதிர்ப்புக் குரல் எழுப்பியதால் இரு தரப்பினரிடையே பதற்றமான சூழல் உருவாகியுள்ளது. மூன்றாவது நாளாகவும் தடையை மீறி தொழுகை நடத்தப்பட்ட நிலையில், சில மாணவர் அமைப்புகள் மனித சங்கிலி அமைத்து ஆதரவு வழங்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
.
இந்த நிலையில், லக்னோ பல்கலை வளாகத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. காவல்துறையினர் நிலைமையை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். மசூதி மூடலுக்கு எதிரான மாணவர் போராட்டத்திற்கு சில அரசியல் தலைவர்களும் ஆதரவு தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.