தேசியவாத காங்கிரஸ் தலைவராக சுனேத்ரா பவார் தேர்வு.!
மகாராஷ்டிர துணை முதல்வர் சுனேத்ரா பவார், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவராக நேற்று தேர்வு செய்யப்பட்டார்.
மகாராஷ்டிர முன்னாள் துணை முதல்வரும் தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவருமான அஜித் பவார், கடந்த ஜனவரி 28 ஆம் தேதி நிகழ்ந்த விமான விபத்தில் உயிரிழந்தார். இதனைத் தொடர்ந்து, அவரது மனைவி சுனேத்ரா பவார் ஜனவரி 31 ஆம் திகதி மகாராஷ்டிர துணை முதல்வராக பதவியேற்றார்.
இந்நிலையில், கட்சியின் தேசிய நிர்வாகிகள் குழுக் கூட்டம் மும்பை நகரில் நேற்று நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் சுனேத்ரா பவார் தேசிய தலைவராக ஒருமனதாகத் தேர்வு செய்யப்பட்டார்.அஜித் பவாரின் மறைவால் காலியாகியுள்ள பாராமதி சட்டப்பேரவைத் தொகுதிக்கு விரைவில் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட உள்ளது. அந்தத் தொகுதியில் சுனேத்ரா பவார் போட்டியிட உள்ளதாகவும், அவர் போட்டியின்றி தேர்வு செய்யப்படக்கூடும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சுனேத்ரா பவார் இதற்கு முன் மாநிலங்களவை உறுப்பினராகப் பதவி வகித்தார். அந்தப் பதவியை அண்மையில் ராஜினாமா செய்துள்ளார். அவரது மூத்த மகன் பார்த் பவார் மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்குப் பரிந்துரைக்கப்படுவார் என கட்சியின் செயல் தலைவர் பிரபுல் படேல் தெரிவித்துள்ளார்.