தமிழக சட்டமன்றத் தேர்தல்: தி.மு.க.– காங்கிரஸ் தொகுதி பேச்சுவார்த்தை நீடிப்பு.!
தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் கூட்டணி கட்சிகளுக்கிடையிலான தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தைகள் தீவிரமடைந்துள்ளன. ஆளும் திராவிட முன்னேற்றக் கழகம் தலைமையிலான கூட்டணியில் இந்திய தேசிய காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், கம்யூனிஸ்ட் கட்சிகள், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம், இந்திய யூனியன் முஸ்லீம் லீக், மனிதநேய மக்கள் கட்சி உள்ளிட்ட பல கட்சிகள் இடம்பெற்றுள்ளன.
இதில் தி.மு.க.–காங்கிரஸ் இடையிலான தொகுதி உடன்பாடு இன்னும் எட்டப்படவில்லை. அதற்கான அதிகாரப்பூர்வ பேச்சுவார்த்தைக்கான அழைப்பு தி.மு.க. தரப்பில் இதுவரை விடுக்கப்படாத நிலையில், காங்கிரஸ் அதற்காக காத்திருப்பதாகக் கூறப்படுகிறது. எனினும், கடந்த 22 ஆம் திகதி அகில இந்திய காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி. வேணுகோபால், தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்களை சந்தித்து, கூட்டணி தொகுதி பங்கீடு குறித்த கடிதத்தை வழங்கியதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
அந்தக் கடிதத்தில், தமிழக காங்கிரசுக்கு 41 சட்டமன்றத் தொகுதிகள், 2 மாநிலங்களவை இடங்கள், உள்ளாட்சித் தேர்தலில் கணிசமான பங்கு மற்றும் ஆட்சியில் பங்கேற்பு உள்ளிட்ட கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. தொடர்ந்து, தமிழ்நாடு காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர், தி.மு.க. துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி அவர்களை சந்தித்தார்.
இந்நிலையில், கிரிஷ் சோடங்கர் அளித்த பேட்டியில், “ஆட்சி அதிகாரத்தை விரும்பாத கட்சி எது? நாங்கள் அறக்கட்டளை நடத்தவில்லை” எனத் தெரிவித்ததுடன், கட்சிக்கு 12 முதல் 20 சதவீதம் வரை வாக்கு ஆதரவு இருப்பதாகவும், 22 ஆயிரம் கிராமக் குழுக்கள் மற்றும் 63 ஆயிரம் வாக்குச்சாவடி முகவர்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இதனால் தி.மு.க.–காங்கிரஸ் கூட்டணி நிலைமை இன்னும் உறுதியற்றதாகவே பார்க்கப்படுகிறது. ஆட்சியில் பங்கேற்பு குறித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் முன்வைத்த கருத்துகளுக்கும், உள்ளாட்சித் தேர்தலில் அதிகாரப் பங்கீடு வேண்டும் என்ற காங்கிரஸ் நிலைப்பாட்டிற்கும் இடையில் கருத்து வேறுபாடு நீடிப்பதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதற்கிடையில், நாடாளுமன்ற மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி, வருகிற மார்ச் 5 ஆம் திகதி காஞ்சீபுரம் மாவட்டத்தில் நடைபெறவுள்ள தமிழ்நாடு காங்கிரஸ் கிராமக் குழு நிர்வாகிகள் கூட்டத்தில் பங்கேற்க உள்ளதாகக் கூறப்படுகிறது.
மேலும், விஜய் அவர்களுடன் இணைந்து செயல்படுவது குறித்த ஆலோசனைகள் நடைபெற்று வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
காங்கிரசுக்கு ஆட்சியில் பங்கு வழங்குதல், அமைச்சரவைப் பதவிகள் ஒதுக்குதல் உள்ளிட்ட முன்மொழிவுகள் பேசப்பட்டதாகவும், இது தொடர்பான முக்கிய அறிவிப்புகள் மார்ச் முதல் வாரத்தில் வெளியாகலாம்என்றும் அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.