வேலூரில் த.வெ.க நிகழ்ச்சி: அனுமதி வழங்கப்பட்ட விதம் குறித்து காவல் துறை விளக்கம்.!
வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா அருகே உள்ள அகரம்சேரியில் நடைபெற்ற தவெக நிர்வாகிகள் சந்திப்பு நிகழ்ச்சிக்கு, மனு அளித்த சில நாட்களிலேயே அனுமதி வழங்கப்பட்டதாக காவல் துறை தெரிவித்துள்ளது. எனினும், நிகழ்ச்சியில் விதிமுறைகள் மீறப்பட்டதாகவும், எதிர்பார்த்த எண்ணிக்கையை விட அதிகமானோர் பங்கேற்றதாகவும் காவல் துறை குற்றஞ்சாட்டியுள்ளது.
தவெக சார்பில் கடந்த ஜனவரி 28ஆம் திகதி, 25 ஆயிரம் பேர் பங்கேற்கும் வகையில் நிகழ்ச்சி நடத்த அனுமதி கோரி மனு அளிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, நிகழ்ச்சி தொடர்பான அடிப்படை தகவல்கள் கேட்கப்பட்டதாகவும், பின்னர் தேதி மாற்றம் தொடர்பாக மீண்டும் மனு வழங்கப்பட்டதாகவும் காவல் துறை தெரிவித்துள்ளது.
பின்னர், நிகழ்ச்சி நடைபெறும் நாளுக்கு முன்னதாக அளிக்கப்பட்ட மனுவில், பங்கேற்பாளர் எண்ணிக்கை 25 ஆயிரத்திலிருந்து 4,900 ஆக குறைக்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டது. அடிப்படை வசதிகள் குறித்து கேள்விகள் எழுப்பப்பட்டு, அவற்றுக்கான பதில்கள் பெறப்பட்ட பின்னர், கள ஆய்வின் அடிப்படையில் பிப்ரவரி 22ஆம் திகதி அனுமதி வழங்கப்பட்டதாக காவல் துறை விளக்கியுள்ளது.காவல் துறை வெளியிட்ட அறிக்கையில், அனுமதி வழங்கும் செயல்முறையில் காலதாமதம் எதுவும் ஏற்படவில்லை எனவும், மக்களின் பாதுகாப்பு கருதி நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், நிகழ்ச்சியில் மனுவில் குறிப்பிடப்பட்ட எண்ணிக்கையை விட அதிகமானோர், சுமார் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்றதாகத் தெரியவந்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.இதன் மூலம், சென்னை உயர் நீதிமன்றத்தின் அறிவுறுத்தல்கள் மற்றும் அரசாணையில் குறிப்பிடப்பட்ட விதிமுறைகள் மீறப்பட்டுள்ளன என காவல் துறை தெரிவித்துள்ளது.