வடக்கு மாகாணத்தில் ‘நிழல் அமைச்சர்கள்’ நியமனம்: கஜேந்திரகுமார் பொன்னம்பலம் குற்றச்சாட்டு.!
வடக்கு மாகாண சபை செயலற்ற நிலையில் இருக்கும் சூழலில், மாகாண அதிகாரங்களுக்கு உட்பட்ட துறைகளுக்கென ‘நிழல் அமைச்சர்கள்’ நியமித்து ஆட்சியை முன்னெடுக்க அரசு முயற்சித்து வருவதாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் குற்றஞ்சாட்டியுள்ளார்.
நாடாளுமன்றத்தில் நேற்று உரையாற்றிய அவர், அமைச்சர் பிமல் ரத்நாயக்க அண்மையில் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்தபோது, வடக்கு மாகாணத்தில் துறைகளுக்கென நாடாளுமன்ற உறுப்பினர்களை நியமித்து, அவர்களூடாக நிர்வாகத்தை முன்னெடுக்குமாறு வடக்கு மாகாண ஆளுநர் நா. வேதநாயகன் அவர்களுக்கு அறிவுறுத்தியதாக தெரிவித்தார்.
அவரது கூற்றுப்படி, சுகாதாரத் துறைக்கு நாடாளுமன்ற உறுப்பினர் சிறீபவானந்தராஜா, கல்வித் துறைக்கு ஜெகதீஸ்வரன், மகளிர் விவகாரங்களுக்கு ரஜீவன், உள்ளூராட்சி சபைகளுக்கு இளங்குமரன், விவசாயம் மற்றும் கால்நடைத் துறைகளுக்கு திலகநாதன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
அண்மையில் வடக்கு மாகாணத்தில் சுகாதாரத் துறை தொடர்பான கலந்துரையாடல் நடைபெற்றபோது, குறிப்பிட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மட்டுமே அழைக்கப்பட்டதாகவும், அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் சம வாய்ப்பு வழங்கப்படவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
வடக்கு மாகாண சபை அமைப்புக்கு எதிராக முன்பு நிலைப்பாடு எடுத்தவர்கள், தற்போது அதே நிர்வாக அமைப்பில் தங்களது ஆதரவாளர்களை நியமிப்பது அரசியல் நேர்மையற்ற செயற்பாடாகும் என்றும் அவர் குற்றம்சாட்டினார்.
இவ்வாறான நடவடிக்கைகளில் ஈடுபடாமல், சட்டப்பூர்வமான நிர்வாக முறைகளைப் பின்பற்றுமாறு அரசைத் தாம் வலியுறுத்துவதாகவும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார்.