புதிய அரசமைப்பின் மூலம் இனப்பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு உறுதி – பிரதி அமைச்சர் பிரதீப் தெரிவிப்பு.!
இலங்கையில் நீண்டகாலமாக நிலவி வரும் இனப்பிரச்சினைக்கு புதிய அரசமைப்பின் மூலம் நிரந்தரத் தீர்வு காணப்படுமென பிரதி அமைச்சர் தெரிவித்துள்ளார்.ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் புதிய அரசமைப்பை உருவாக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றது. இந்நிலையில், அரசமைப்பு உருவாக்கப் பணிகள் தொடர்பாக பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் ஊடகங்களிடம் கருத்து வெளியிட்டார்.அவர் தெரிவித்ததாவது:
“தமிழ் மக்களுக்கு நீண்டகாலமாகப் பிரச்சினைகள் நிலவி வருகின்றன. அவை இதுவரை தீர்க்கப்படவில்லை என்பதனை அனைவரும் ஏற்றுக்கொள்ள வேண்டும். ஜனாதிபதி அநுர தலைமையிலான அரசில் தமிழர்கள் நம்பிக்கை வைத்துள்ளனர். அவர்களின் பிரச்சினைகளுக்கு நிரந்தரத் தீர்வு காணுவது அரசின் முக்கிய நோக்கமாகும்.இனவாதம் அற்ற நாடொன்றை உருவாக்குவதே எமது குறிக்கோள். அந்த இலக்கை நோக்கி அரசாங்கம் செயல்பட்டு வருகின்றது.புதிய அரசமைப்பை உருவாக்கும் பணிகளுக்கு அனைத்துத் தரப்பினரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்” என அவர் வலியுறுத்தினார்.