மருதமுனை – பெரியநீலாவணையில் டெங்கு கட்டுப்பாட்டிற்கு விசேட புகைமூட்டல் நடவடிக்கை.!
கல்முனை தெற்கு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட மருதமுனை மற்றும் பெரியநீலாவணை பகுதிகளில் டெங்கு நுளம்புப் பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் இன்று விசேட புகைமூட்டல் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
இப்பகுதிகளில் ஏற்கனவே மேற்கொள்ளப்பட்ட டெங்கு ஒழிப்பு மற்றும் துப்புரவு பணிகளின் தொடர்ச்சியாக, இரண்டாம் கட்ட நடவடிக்கையாக இச்செயற்பாடு முன்னெடுக்கப்பட்டது.
கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி திருமதி சகீலா இஸ்ஸடீன் அவர்களின் ஆலோசனை மற்றும் வழிகாட்டலின் பேரில், கல்முனை மாநகர சபையின் ஒத்துழைப்புடன் இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது.கல்முனை தெற்கு சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் திருமதி எஸ். எப். சாரா சராப்டீன் தலைமையில் நடைபெற்ற களப்பணியில், டெங்கு நுளம்புகள் பெருகும் அபாயம் உள்ளதாக அடையாளம் காணப்பட்ட இடங்கள் இலக்கு வைக்கப்பட்டன.
குறிப்பாக குடியிருப்பு வீடுகள், பாடசாலை வளாகங்கள், அரச மற்றும் தனியார் நிறுவனங்கள், மதஸ்தாபனங்கள் மற்றும் பொது இடங்களில் புகைமூட்டல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.பொதுச் சுகாதார பரிசோதகர்கள் மற்றும் டெங்கு கட்டுப்பாட்டு கள உதவியாளர்கள் இணைந்து மேற்கொண்ட இந்நடவடிக்கை, நுளம்புப் பெருக்கத்தை கட்டுப்படுத்தி பொதுமக்களின் சுகாதார பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் சிறப்பாக நிறைவேற்றப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
