பண்டாரவளை கல்குவாரியில் மண்சரிவு: இரண்டு தொழிலாளர்கள் உயிரிழப்பு.!
பதுளை மாவட்டத்தின் பண்டாரவளைப் பகுதியில் அமைந்துள்ள கல்குவாரி ஒன்றில் இன்று காலை ஏற்பட்ட மண்சரிவில் சிக்கி இரண்டு தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர்.பண்டாரவளை – பூனாகலை வீதியின் 16 மற்றும் 17 ஆம் கிலோமீற்றர் கம்பங்களுக்கு இடைப்பட்ட ‘லியங்கஹவல, மாபிடிய’ பகுதியில் இயங்கிவரும் கல்குவாரியிலேயே இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளது.
இன்று காலை குவாரியில் பாறைத் துளைப்பு பணிகளில் தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தபோது, திடீரென மேல்பகுதியிலிருந்து மண் மற்றும் கற்கள் சரிந்து விழுந்ததாக தெரிவிக்கப்படுகிறது. இதனால் இரண்டு தொழிலாளர்கள் மண் மற்றும் பெரும் பாறைகளின் கீழ் புதைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.
சம்பவம் குறித்த தகவல் கிடைத்ததும், இராணுவத்தினர் மற்றும் பொலிஸார் அவசரமாக சம்பவ இடத்துக்குச் சென்றுள்ளனர். கனரக இயந்திரங்களின் உதவியுடன் சடலங்களை மீட்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளைப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.