வயல்வெளி பாதுகாப்புக்கு அணைக்கட்டு அவசியம் – நாடாளுமன்ற உறுப்பினர் வலியுறுத்தல்.!
வவுனியா – ஓமந்தை கமநல சேவை நிலையப் பிரிவிற்குட்பட்ட பெரியவிளாத்திக்குளம் கமக்கார அமைப்பின் கீழ் காணப்படும் புல்மோட்டை வயல்வெளிக்கான அணைக்கட்டு அமைப்பதுடன், நீர்ப்பாசன வாய்க்காலைச் சீரமைக்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் வலியுறுத்தியுள்ளார்.
13.02.2026 அன்று நடைபெற்ற வவுனியா பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் இவ்விடயம் தொடர்பாக கலந்துரையாடப்பட்டுள்ளது.பெரியவிளாத்திக்குளம் கமக்கார அமைப்பினரால் தமக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்ட ரவிகரன், விவசாயிகள் எதிர்கொள்ளும் சிரமங்களை கருத்தில் கொண்டு குறித்த அணைக்கட்டு மற்றும் நீர்ப்பாசன வாய்க்காலை அமைப்பது அவசரத் தேவையாக உள்ளதாக தெரிவித்தார்.
இதற்கிடையில், இவ்விடயம் தொடர்பாக தமக்கு நேரடியாக எவ்வித கோரிக்கையும் கிடைக்கவில்லை என வவுனியா பிரதேச செயலாளர் தெரிவித்தார். அதேவேளை, அணைக்கட்டு மற்றும் வாய்க்கால் அமைப்பதற்கான தேவை இருப்பதை ஒப்புக்கொண்ட ஓமந்தை கமநல அபிவிருத்தி உத்தியோகத்தர், கமக்கார அமைப்பினரால் தமக்கு உத்தியோகபூர்வ கோரிக்கை சமர்ப்பிக்கப்படவில்லை என குறிப்பிட்டார்.இதற்கு பதிலளித்த ரவிகரன், கமக்கார அமைப்பு தமக்குக் கோரிக்கை முன்வைத்துள்ளதால் உரிய திட்டங்களின் கீழ் விரைந்து நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என வலியுறுத்தினார்.
அதனைத் தொடர்ந்து, உரிய திட்டங்களின் மூலம் குறித்த அணைக்கட்டு மற்றும் நீர்ப்பாசன வாய்க்காலை அமைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என வவுனியா பிரதேச செயலாளர் மற்றும் ஓமந்தை கமநல சேவை நிலைய அபிவிருத்தி உத்தியோகத்தர் தெரிவித்துள்ளனர்.



