இங்கிலாந்தில் தொடர் மழையைத் தொடர்ந்து பல பகுதிகளில் பனி மற்றும் பனிக்கட்டி எச்சரிக்கை!
இங்கிலாந்தில் நீண்ட நாட்களாக நிலவி வந்த மந்தமான மற்றும் ஈரமான வானிலையைத் தொடர்ந்து, இங்கிலாந்தின் சில பகுதிகளில் மீண்டும் குளிர்கால வானிலை திரும்பியுள்ளது.பல இடங்களில் பனிப்பொழிவு மற்றும் பனிக்கட்டி தொடர்பான எச்சரிக்கைகளும் விடுக்கப்பட்டுள்ளன.இதேவேளை, ஆர்க்டிக் பகுதியிலிருந்து வரும் குளிர்ந்த காற்று காரணமாக, வெப்பநிலையானது இயல்பை விட சுமார் 6 பாகை செல்சியஸ் வரை குறையக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஸ்காட்லாந்து மற்றும் வடக்கு இங்கிலாந்து பகுதிகளுக்கு இன்று மாலை 4:00 மணி முதல் நாளை நண்பகல் 12:00 மணி வரை வானிலை ஆய்வு மையம் ‘மஞ்சள் எச்சரிக்கை’ விடுத்துள்ளது.ஆரம்பத்தில் உயரமான பகுதிகளில் பெய்யும் மழையானது, இன்று இரவு நிலப்பரப்புப் பகுதிகளிலும் பனிப்பொழிவாக மாறக்கூடும் எனவும் தெரிவித்துள்ளது.
குறிப்பாக 200 மீட்டருக்கும் அதிகமான உயரமுள்ள இடங்களில் 10 செ.மீ வரை பனி படிய வாய்ப்புள்ளது.இதேவேளை, நாளை அதிகாலையில் மழை மற்றும் பனி விலகினாலும், வெப்பநிலை மிக வேகமாக குறையும்.இதனால் சாலைகளில் பனிக்கட்டிகள் உருவாகி, போக்குவரத்து அபாயகரமானதாக மாறக்கூடும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில் குறைந்து வரும் வெப்பநிலையைக் கருத்தில் கொண்டு, இங்கிலாந்து சுகாதார பாதுகாப்பு நிறுவனம் வடக்கு இங்கிலாந்து மற்றும் மிட்லாண்ட்ஸ் பகுதிகளுக்கு நாளை முதல் எதிர்வரும் திங்கற்கிழமை வரை சுகாதார எச்சரிக்கை விடுத்துள்ளது.இது குறிப்பாக முதியவர்கள் மற்றும் நலிவடைந்த மக்களின் ஆரோக்கியத்திற்கு ஆபத்தை ஏற்படுத்தக்கூடும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.
இன்று காலை நிலவரப்படி,81 வெள்ள எச்சரிக்கைகள் அமலில் உள்ளன.தெற்கு இங்கிலாந்தில் நிலத்தடி நீர் மட்டம் அதன் கொள்ளளவை எட்டியுள்ளதால், நிலத்தடி நீர் மூலமான வெள்ளப்பெருக்கு இன்னும் பல நாட்கள் அல்லது வாரங்களுக்கு நீடிக்கக்கூடும் எனவும் எதிர்வு கூறப்பட்டுள்ளது.