ஆவரங்கால் – தொண்டைமானாறு வீதி புனரமைப்பு: ரூ. 680 மில்லியன் செலவில் பணிகள் தொடக்கம்.!
வடக்கு மாகாணத்தில் வீதிக் கட்டமைப்பை மேம்படுத்தும் நோக்கில் நடைமுறைப்படுத்தப்படும் ‘மறுமலர்ச்சிக்கான பாதை’ திட்டத்தின் கீழ், ‘ஆவரங்கால் – தொண்டைமானாறு’ வீதியின் மேம்படுத்தல் மற்றும் புனரமைப்புப் பணிகள் நேற்று (புதன்கிழமை) காலை அச்சுவேலி மத்திய பேருந்து நிலையத்தில் உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டன.
போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர மேம்பாட்டு அமைச்சர் பிமல் ரத்நாயக்க பங்கேற்ற இந்நிகழ்வில் உரையாற்றிய வடக்கு மாகாண ஆளுநர் நா. வேதநாயகன், தற்போதைய அரசு மக்களின் அடிப்படைத் தேவைகளை முன்னிறுத்தி வீதிகள், பாலங்கள் மற்றும் இறங்குதுறைகளை அபிவிருத்தி செய்து வருவதாக தெரிவித்தார்.வரி நீங்கலாக சுமார் 680 மில்லியன் ரூபா மதிப்பீட்டில், 6.03 கிலோமீற்றர் நீளத்திலான இவ்வீதி முழுமையாகப் புனரமைக்கப்படவுள்ளது. துரிதமாக முன்னெடுக்கப்படும் இப்பணிகள் நிறைவடைந்து, 12.05.2027 அன்று மக்கள் பாவனைக்காக மீள ஒப்படைக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.ஆளுநர் தனது உரையில் மேலும் கூறுகையில்,
“ஆவரங்கால் – தொண்டைமானாறு வீதியை மேம்படுத்த பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டிருந்தாலும், நீண்டகாலமாக அது சாத்தியமாகவில்லை. இப்போது அந்தக் கனவு நனவாகிறது. தற்போதைய அரசாங்கத்தின் காலத்தில் வடக்கு மாகாணத்தில் பல அபிவிருத்தித் திட்டங்கள் நடைமுறைக்கு வருகின்றன.அமைச்சர் பிமல் ரத்நாயக்க வடக்கு மக்களின் பிரச்சினைகளை நன்கு அறிந்தவர். அவர் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த காலத்திலேயே வடக்கு மக்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்தவர். இக்காலத்தில் அவர் அமைச்சராக இருப்பது எமது மாகாணத்திற்கு ஒரு வாய்ப்பாகும்.” என தெரிவித்தார்.
நிகழ்வின் ஆரம்பத்தில் சமய வழிபாடுகள் இடம்பெற்றதையடுத்து, வீதிப் புனரமைப்புக்கான பெயர்ப்பலகை அமைச்சர் மற்றும் ஆளுநரால் திரைநீக்கம் செய்யப்பட்டு, நிர்மாணப் பணிகள் உத்தியோகபூர்வமாக தொடங்கப்பட்டன.இந்நிகழ்வில் யாழ்ப்பாண மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஜெ. ரஜீவன், எஸ். ஸ்ரீபவானந்தராஜா, வலி. கிழக்கு பிரதேச சபைத் தவிசாளர் தி. நிரோஷ், யாழ்ப்பாண மாவட்ட செயலர் ம. பிரதீபன், வீதி அபிவிருத்தி அதிகார சபையின் மாகாணப் பணிப்பாளர் குரூஸ், உள்ளூராட்சி பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்துகொண்டனர்.


