முல்லைத்தீவு விரைவில் அபிவிருத்திப் பாதையில்: அடிப்படைத் திட்டங்கள் ஆரம்பம் – வடக்கு ஆளுநர் தெரிவிப்பு.!
வளம் நிறைந்தும் வறுமைச் சுட்டியில் முன்னிலையில் உள்ள முல்லைத்தீவு மாவட்டம், அடுத்த இரண்டு முதல் மூன்று ஆண்டுகளில் குறிப்பிடத்தக்க அபிவிருத்தியை அடையும் என வடக்கு மாகாண ஆளுநர் நா. வேதநாயகன் தெரிவித்துள்ளார்.
போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்நாயக்க பங்கேற்ற முல்லைத்தீவு மாவட்ட விசேட ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டம் நேற்று (புதன்கிழமை) மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் உரையாற்றியபோதே ஆளுநர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,“வடக்கு மாகாணத்தில் மிகப்பெரிய நிலப்பரப்பையும் வளமான இயற்கை வளங்களையும் கொண்ட மாவட்டமாக முல்லைத்தீவு விளங்குகின்றது. இருந்தபோதிலும், வறுமைச் சுட்டியில் முதலிடத்தில் இருப்பது வருத்தமளிக்கின்றது. இம்மாவட்டத்தை பின்தங்கிய நிலையிலிருந்து மீட்டெடுக்கத் தேவையான அடிப்படைத் திட்டங்களும் கட்டுமானப் பணிகளும் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அவை விரைவுபடுத்தப்படும்.
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க மற்றும் அமைச்சர் பிமல் ரத்நாயக்க ஆகியோர் வடக்கு மக்களிடம் கொண்டுள்ள அக்கறையை, மாகாணத்தின் முன்னேற்றத்திற்காக பயனுள்ளதாக மாற்றிக்கொள்ள வேண்டும்.” என வலியுறுத்தினார்.இதன்பின் கருத்துத் தெரிவித்த அமைச்சர் பிமல் ரத்நாயக்க,“கொக்கிளாய் – புல்மோட்டை பாலம் அமைப்பதற்கான சாத்தியவள ஆய்வு தற்போது முன்னெடுக்கப்படுகிறது. அடுத்த மூன்று மாதங்களுக்குள் ஆய்வு அறிக்கை நிறைவு பெற்றால், அடுத்த ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தில் தேவையான நிதியை ஒதுக்க முடியும். இத்திட்டம் குறித்து ஜனாதிபதி சிறப்பு கவனம் செலுத்தி வருகிறார்.” என்றார்.
கூட்டத்தின் ஆரம்பத்தில் வரவேற்புரையாற்றிய முல்லைத்தீவு மாவட்ட செயலர், மக்களின் நீண்டகாலக் கனவாக இருந்த வட்டுவாகல் பாலத்தின் புனரமைப்புப் பணிகள் தற்போது தொடங்கியுள்ளதாக தெரிவித்தார். மேலும், முல்லைத்தீவிலிருந்து கொழும்பு நோக்கி குளிரூட்டப்பட்ட சொகுசுப் பேருந்து சேவை அறிமுகப்படுத்தப்பட்டதன் மூலம் நீண்டகால குறை நீங்கியுள்ளதாகவும் சுட்டிக்காட்டினார்.அத்துடன், கடந்த ‘டித்வா’ பேரிடரால் சேதமடைந்த வீதிகள் மற்றும் பாலங்களைப் புனரமைப்பதற்கான கோரிக்கையும் இக்கூட்டத்தில் முன்வைக்கப்பட்டது.
இக்கலந்துரையாடலில் முல்லைத்தீவு மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுத் தலைவர் மற்றும் கூட்டுறவு பிரதி அமைச்சர் உபாலி சமரசிங்க, நாடாளுமன்ற உறுப்பினர்கள் க. திலகநாதன், து. ரவிகரன், காதர் மஸ்தான், வடக்கு மாகாண பிரதம செயலாளர், அமைச்சின் மேலதிக செயலாளர்கள், திணைக்களத் தலைவர்கள், பிரதேச செயலாளர்கள் மற்றும் உள்ளூராட்சி மன்றத் தவிசாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

