இலங்கையில் மாயமான ஆயிரக்கணக்கான கையடக்கத் தொலைபேசிகள் – பொலிஸார் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்.!
கடந்த 2025ஆம் ஆண்டு மாத்திரம் நாடு முழுவதும் 2,355 கையடக்கத் தொலைபேசிகள் காணாமல் போனதாக முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் உதவி பொலிஸ் அத்தியட்சகருமான எப்.யு. வுட்லர் தெரிவித்தார்.
பத்தரமுல்லையில் நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த அவர், இவ்வாறு காணாமல் போகும் அல்லது திருடப்படும் கையடக்கத் தொலைபேசிகள் சில குழுக்களால் குற்றச்செயல்கள் மற்றும் சமூக விரோத, சட்டவிரோத நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்தப்படுகின்றன என்பது விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக கூறினார்.
2025ஆம் ஆண்டு பதிவுகளின்படி, 2,355 தொலைபேசிகள் காணாமல் போனதுடன், 2,019 தொலைபேசிகள் திருடப்பட்டுள்ளன. அதேவேளை, 2024ஆம் ஆண்டு 2,796 தொலைபேசிகள் காணாமல் போனதுடன், 928 தொலைபேசிகள் திருடப்பட்டிருந்தன என்றும் அவர் தெரிவித்தார்.
கையடக்கத் தொலைபேசி காணாமல் போனவுடன் உடனடியாக சம்பந்தப்பட்ட சேவை வழங்குநரைத் தொடர்பு கொண்டு சிம் அட்டையை முடக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார். இல்லையெனில், அந்தத் தொலைபேசி மூன்றாம் தரப்பினரால் தவறான நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்தப்பட வாய்ப்புள்ளதாகவும் எச்சரித்தார்.
மேலும், பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யும் போது, தொலைபேசியின் சர்வதேச மொபைல் சாதன அடையாள இலக்கம் (IMEI) குறிப்பிடுவது கட்டாயம் எனவும் தெரிவித்தார். எனவே, பொதுமக்கள் தங்களது IMEI இலக்கத்தை முன்கூட்டியே பதிவு செய்து வைத்திருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.அத்துடன், பொலிஸாரால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள www.ineed.police.lk என்ற இணையதளத்தில் பதிவு செய்வதன் மூலம் காணாமல் போன தொலைபேசிகளைத் தேடும் பணியில் முன்னுரிமை வழங்கப்படும் என்றும் அவர் கூறினார்.தமக்குச் சொந்தமில்லாத பொருளை வைத்திருப்பதும் பயன்படுத்துவதும் சட்டரீதியாக தண்டனைக்குரிய குற்றமாகும் எனவும் அவர் நினைவூட்டினார்.
பிறரின் பொருளை சட்டவிரோதமாக பயன்படுத்துவோருக்கு 2 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படலாம். அதேபோல், திருடப்பட்ட பொருள் என்பதை அறிந்தே வாங்குபவர்கள் அல்லது வைத்திருப்பவர்கள் 3 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனைக்கு உட்படக்கூடும் எனவும் அவர் தெரிவித்தார்.எனவே, புதிய அல்லது பயன்படுத்தப்பட்ட கையடக்கத் தொலைபேசிகளை வாங்கும் போது அவை திருடப்பட்டவையா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுவது அவசியம் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்தார்.