இராணுவ ஒத்துழைப்புக்கு சவுதி – சோமாலியா ஒப்பந்தம்.!
இராணுவ ஒத்துழைப்புக்கான புரிந்துணர்வு உடன்படிக்கையில் சவுதி அரேபியாவும் சோமாலியாவும் கைச்சார்த்திட்டுள்ளன.நேற்று முன்தினம் சவுதியின் தலைநகர் ரியாத்தில் கைச்சார்த்திடப்பட்ட இந்த ஒப்பந்தத்தில் சவுதி அரேபிய பாதுகாப்பு அமைச்சரான இளவரசர் காலித் பின் சல்மான் பின் அப்துல் அஸீஸும், சோமாலிய பாதுகாப்பு அமைச்சர் அகமது மோலிம் ஃபிகியும் கையெழுத்திட்டுள்ளனர்.
சோமாலியா கட்டாருடன் இதேபோன்ற ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட சில வாரங்களுக்குப் பிறகு, சவுதி அரேபியாவுடன் இந்த இராணுவ ஒத்துழைப்பு ஒப்பந்தம் கைச்சார்த்திடப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.சோமாலிய நாட்டின் சோமாலிலாந்து பகுதியை இஸ்ரேல் தனிநாடாக அங்கீகரித்ததற்கு எதிராக பிராந்திய நாடுகளின் ஆதரவை சோமாலியா திரட்டும் சூழலில் இந்த புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கைச்சார்த்திடப்பட்டிருக்கிறது.
சவுதி அரேபியாவுடன் மேற்கொள்ளப்பட்டுள்ள பாதுகாப்பு ஒத்துழைப்பு ஒப்பந்தம் குறித்து சோமாலியாவின் பாதுகாப்பு அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில், ‘இந்த ஒப்பந்தம் இரு நாடுகளுக்கும் இடையிலான பாதுகாப்பு மற்றும் இராணுவ ஒத்துழைப்பின் கட்டமைப்புகளை வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. அத்தோடு இரு தரப்பினரின் மூலோபாய நலன்களுக்கு சேவை செய்யும் பொதுவான ஆர்வமுள்ள பல பகுதிகளையும் உள்ளடக்கியது’ என்றுள்ளது. இந்த ஒப்பந்தத்தை சவுதி பாதுகாப்பு அமைச்சரான இளவரசர் காலித் பின் சல்மான் எக்ஸ் தளத்தில் பதிவிட்டு உறுதிப்படுத்தியுள்ளார். அல் ஜசீரா