17 வயது சிறுவன் பொலிஸார் துப்பாக்கிச்சூட்டில் உயிரிழப்பு – உயர் மட்ட விசாரணை ஆரம்பம்..!
யாழ்ப்பாணம் அல்லைப்பிட்டி பகுதியில் இன்று அதிகாலை பொலிஸார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 17 வயது சிறுவன் அல்பினோ அருள் பயாஸ் உயிரிழந்த சம்பவம் தொடர்பில், அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ உயர்மட்ட விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன என தெரிவித்துள்ளார்.
ஊர்காவற்றுறை வீதியில் உள்ள அல்லைப்பிட்டி சந்தியில் கடமையில் இருந்த பொலிஸார், சந்தேகத்துக்கிடமான ஹயஸ் ரக வாகனத்தை நிறுத்தும் கட்டளையிட்டதாகவும், வாகனம் கட்டளையை மீறியதாலேயே துப்பாக்கிச்சூடு இடம்பெற்றதாகவும் பொலிஸார் கூறியுள்ளனர்.அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ, “வாகனத்தை நோக்கி நேரடியாக துப்பாக்கிச்சூடு முன்னெடுக்குவதற்கு முன்பு வானத்தை நோக்கி பலமுறை எச்சரிக்கை வேட்டுக்கள் வழங்கப்பட்டன. அந்த எச்சரிக்கையையும் மீறியதால் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டது” என விளக்கியுள்ளார்.
சம்பவம் தொடர்பில் ஊர்காவற்றுறை பொலிஸாரும், யாழ் மாவட்டக் குற்ற விசாரணைப் பிரிவும் இணைந்து தீவிர விசாரணைகளை முன்னெடுத்துவருகின்றனர்.மரணமடைந்த சிறுவனின் பெற்றோர், “குடும்பக் கஷ்டத்தால் சிறு வயதிலேயே வேலைக்குச் சென்றார். சாரதி அனுமதிப்பத்திரம் இல்லாத போதிலும் வாகனம் ஓட்டுவதை தொழிலாகக் கொண்டிருந்தார். இன்று அதிகாலை ஆட்களை வேலைக்கு ஏற்றுவதற்காகச் சென்றபோது இந்த அநியாயம் நிகழ்ந்தது” என கூறியுள்ளனர்.இந்த சம்பவம் யாழ்ப்பாணத்தில் பெரும் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
