உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
25 செவ்வாய்

முல்லையில் யாழ். பல்கலைக்கழக பீடம்; கட்டுமானப் பணிகளை ஆரம்பிக்க நடவடிக்கை.!

இலங்கை செய்திகள் 7 மாதங்கள் முன்
22 பார்வைகள்

முல்லைத்தீவு மாவட்டத்தில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்துக்கு ஒதுக்கப்பட்ட காணியில் அபிவிருத்திப் பணிகளைப் படிப்படியாக ஆரம்பிப்பதற்கும், காணி ஆக்கிரமிப்பைத் தடுக்கும் வகையில் எல்லைகளை இட்டு வேலி அமைப்பதற்கும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக நிர்வாகம் இணக்கம் தெரிவித்துள்ளது.

முல்லைத்தீவு மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் முன்வைக்கப்பட்ட விடயத்துக்கு அமைவாக, வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனின் தலைமையில் ஆளுநர் செயலகத்தில் நேற்று திங்கட்கிழமை மாலை நடைபெற்ற விசேட கலந்துரையாடலிலேயே இந்தத் தீர்மானம் எட்டப்பட்டது.

கடந்த 27.01.2026 அன்று நடைபெற்ற முல்லைத்தீவு மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்துக்கு ஒதுக்கப்பட்ட காணியில் நீண்டகாலமாக எவ்வித அபிவிருத்திப் பணிகளும் முன்னெடுக்கப்படவில்லை எனவும், இதனால் அக்காணியைத் தனிநபர்கள் ஆக்கிரமிப்பதாகவும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டிருந்தன. இது தொடர்பில் ஆராய்ந்து உடனடித் தீர்வு காண்பதற்காக ஆளுநர் தலைமையில் இக்கலந்துரையாடல் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இச்சந்திப்பில் கருத்துத் தெரிவித்த ஆளுநர்,

“நான் முல்லைத்தீவு மாவட்ட செயலராகக் கடமையாற்றிய காலப்பகுதியிலேயே, இம்மாவட்டத்தின் கல்வி வளர்ச்சியை முன்னிட்டு உயர்கல்வி நிறுவனம் ஒன்றின் கிளையை நிறுவுவதற்கான முயற்சிகளை மேற்கொண்டிருந்தேன். முல்லைத்தீவு மாவட்டம் வளர்ச்சியடைய வேண்டுமாயின், அங்கு பல்கலைக்கழக பீடம் ஒன்று அமைக்கப்படுவது காலத்தின் கட்டாயமாகும்.” – என்று வலியுறுத்தினார்.

இக்கலந்துரையாடலின் போது, வவுனியா பல்கலைக்கழகம் மன்னாரில் தமது பீடத்தை அமைப்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளமை சுட்டிக்காட்டப்பட்டது.

இதன்போது கருத்துத் தெரிவித்த யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் சிறீசற்குணராஜா, “முல்லைத்தீவில் எமக்கு ஒதுக்கப்பட்ட காணியில் செயற்பாடுகளை ஆரம்பிக்க நாம் தயாராகவே உள்ளோம். எனினும், போதிய நிதி ஒதுக்கீடுகள் இன்மை காரணமாகவே தாமதம் ஏற்பட்டது.” – என்று தெளிவுபடுத்தினார்.

இதற்குத் தீர்வாக, முல்லைத்தீவு மாவட்டத்துக்கு ஒதுக்கப்பட்டுள்ள விசேட நிதி ஒதுக்கீட்டிலிருந்து, பல்கலைக்கழகத்தின் ஆரம்பகட்ட கட்டுமானப் பணிகளுக்காக ஒரு தொகுதி நிதியை வழங்குவதற்கான முன்மொழிவைச் சமர்ப்பிப்பதாக முல்லைத்தீவு மாவட்ட செயலாளர் அ.உமாமகேஸ்வரன் இதன்போது உறுதியளித்தார்.

பல்கலைக்கழகத்துக்கு ஒதுக்கப்பட்ட 44 ஏக்கர் காணிக்குரிய எல்லைகளை உடனடியாக அளவீடு செய்து, வேலி அமைக்கும் பணிகளைப் பல்கலைக்கழக நிர்வாகம் விரைவில் ஆரம்பிக்கும் எனத் துணைவேந்தர் உறுதியளித்தார்.

வேலி அமைக்கப்பட்டதைத் தொடர்ந்து, மாவட்ட செயலகம் வழங்கும் நிதி உதவியுடன் படிப்படியாகக் கட்டட நிர்மாணப் பணிகளை முன்னெடுக்கத் தீர்மானிக்கப்பட்டது.

இந்தக் கலந்துரையாடலில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் துணைவேந்தர், பதிவாளர், வவுனியா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் சார்பில் பிரதிநிதிகள், முல்லைத்தீவு மாவட்டச் செயலாளர், வடக்கு மாகாண காணி ஆணையாளர் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

எல்நினோ காலநிலையால் மின்சாரத் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்!

நாட்டில் நிலவும் எல் நினோ (El Niño) காலநிலை காரணமாக நீர்நிலைகள் வற்றி வருவதனால், மின் உற்பத்திக் திறன் குறைவடைந்து மின்சாரத்துக்கான கேள்வி அதிகரிக்கும் சாத்தியக்கூறு காணப்படுவதாக…

45 0 0
இலங்கை செய்திகள்

உயிர்த்த ஞாயிறு சம்பவம் : பிரதான வழக்கின் தீர்ப்பு செப்டம்பர் 22ற்குத் திகதியிடப்பட்டுள்ளது

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பான வழக்கின் தீர்ப்பு எதிர்வரும் செப்டம்பர் மாதம் 22 ஆம் திகதி அறிவிக்கப்படும் என கொழும்பு மூவரடங்கிய விசேட மேல்…

86 0 0
இலங்கை செய்திகள்

போ@தைப்பொருள், மற்றும் மணல் மாபியாக்களைத் தடுப்பதில் வடக்கு மாகாண பொலிஸார் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்!

போதைப்பொருள் கட்டுப்பாடு, மணல் மாபியாக்களைத் தடுப்பதில்வடக்கு மாகாணப் பொலிஸார் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் வடக்கு மாகாணத்தில் பொலிஸாரின் செயற்பாடுகளில் முன்னேற்றம் காணப்படுவதாகச் சுட்டிக்காட்டிய வடக்கு மாகாண…

76 0 0
இலங்கை செய்திகள்

காணாமல் ஆக்கப்படும் சம்பவங்கள் இனிவரும் சந்ததிகளுக்கு மீள் நிகழாமையை உறுதிப்படுத்த வேண்டும்!

எங்களுடைய உறவுகள் இன்றைக்கு காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதி கேட்டு நிற்கிறோம் என்று சொன்னால், இனிவரும் சந்ததிகளுக்கு அது இனிமேல் நடக்காமல் இருக்க வேண்டும், மீள் நிகழாமையை உறுதிப்படுத்தவேதான்…

34 0 0