திருக்கோவில் பகுதியில் மக்கள் பங்கேற்புடன் கொண்டாடப்பட்ட பாரம்பரிய பொங்கல் விழா.!
அம்பாறை மாவட்டம் திருக்கோவில் பிரதேசத்தின் திருக்கோவில் 04 காயத்திரி கிராமத்தில், சமூக தரிசனம் ஒன்றியம் தொண்டர் அமைப்பின் ஏற்பாட்டில் 10வது ஆண்டு பொங்கல் விழாவும் கௌரவிப்பு நிகழ்வும் நேற்றைய தினம் சிறப்பாக நடைபெற்றது.
இந்நிகழ்வு SVO அமைப்பின் தலைமைக் காரியாலயத்தில், அமைப்பின் ஸ்தாபகர் திரு. பி. நந்தபாலு தலைமையில் நடைபெற்றது.
நிகழ்வில் புலமைப்பரிசில் பரீட்சையில் சிறப்பாகச் சித்தியடைந்த மாணவர்கள், பல்கலைக்கழகங்களுக்கு தெரிவான மாணவர்கள், சிரேஷ்ட பிரஜைகள் உள்ளிட்டோர் கௌரவிக்கப்பட்டனர். இதனுடன், பொது அமைப்புகளின் இணைப்பில் பொங்கல் விழா நிகழ்வுகளும் நடைபெற்றன.
இந்நிகழ்வில் திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடிஸ்வரன், மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் ஞா. ஸ்ரீநேசன் மற்றும் ஸ்ரீநாத் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். மேலும், சமயத் தலைவர்கள், பிரதேச சபை உறுப்பினர்கள், பொது அமைப்புகளின் பிரதிநிதிகள், மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.
நிகழ்வின் நிறைவில் கௌரவிப்பு நிகழ்ச்சிகள் இடம்பெற்றதுடன், பிரதான அதிதிகளின் விசேட உரைகளும் நிகழ்த்தப்பட்டன.

