ட்ரோன் உதவியுடன் ஆயுதங்கள் கடத்தல் ; முயற்சியை முறியடித்த இஸ்ரேல்.!
காசாவில் ஹமாஸ் அமைப்புக்கு எதிராக இஸ்ரேல் தொடர்ந்து கடுமையான தாக்குதல்கள் மேற்கொண்டு வரும் நிலையில், எழுபதாயிரத்திற்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. உயிரிழந்தவர்களில் பொதுமக்கள் பெரும்பான்மையாக உள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில், இஸ்ரேல் பாதுகாப்புப் படை வெளியிட்டுள்ள அறிக்கையில், இஸ்ரேலின் கிழக்கு எல்லைப் பகுதி வழியாக ஒரு ட்ரோன் இரவு நேரத்தில் வடக்கு பிராந்தியத்துக்குள் ஊடுருவ முயன்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வான்வழி கண்காணிப்பு அமைப்புகள் உடனடியாக அந்த ட்ரோனை கண்டறிந்ததாகவும் கூறப்பட்டுள்ளது.
தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், குறித்த ட்ரோன் ஆயுதங்களை கடத்த முயன்றது உறுதி செய்யப்பட்டதாக பாதுகாப்புப் படை தெரிவித்துள்ளது. வடக்கு மாவட்டத்தில் பணியில் இருந்த பொலிஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று ட்ரோனை கைப்பற்றினர். அதில் பன்னிரண்டு கைத்துப்பாக்கிகள் இருந்ததாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆயுதங்களை கடத்த முயன்றதற்கான நோக்கம் என்ன, அவை யாரிடம் கொண்டு செல்லப்பட்டன என்பது தொடர்பான மேலதிக தகவல்கள் இதுவரை வெளியிடப்படவில்லை எனவும் இஸ்ரேல் பாதுகாப்புப் படை தெரிவித்துள்ளது.