கிறைஸ்ட்சர்ச் பள்ளிவாசல் தாக்குதல்: மேன்முறையீடு விசாரணை இன்று ஆரம்பம்.!
நியூசிலாந்தின் கிறைஸ்ட்சர்ச் பள்ளிவாசல் தாக்குதலை நடத்திய குற்றவாளி தாக்கல் செய்துள்ள மேன்முறையீட்டு மனு மீதான ஒரு வார கால விசாரணை இன்று ஆரம்பமாகிறது.இந்த விசாரணை வெல்லிங்டன் நீதிமன்றத்தில் இன்று (09) தொடங்குகிறது.
2019 மார்ச் 15 அன்று பள்ளிவாசலில் வழிபாட்டில் ஈடுபட்டிருந்தவர்களை குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதல் உலகையே உலுக்கியது.
இந்த வழக்கில் தமக்கு விதிக்கப்பட்ட தண்டனையும் குற்றவாளி என்ற தீர்ப்பையும் எதிர்த்து குற்றவாளி மேன்முறையீடு செய்துள்ளார். மேலும், சுமார் ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு, தாம் முன்னதாக அளித்த குற்ற ஒப்புதல் வாக்குமூலத்தைத் திரும்பப் பெறவும் அனுமதி கோரியுள்ளார்.
இந்த விசாரணையில் நீதிமன்றம் முக்கியமாக இரண்டு அம்சங்களை கவனத்தில் கொள்ளவுள்ளது எனத் தெரிவிக்கப்படுகிறது.
2020 ஆம் ஆண்டு இறுதியில், நியூசிலாந்து வரலாற்றில் முதன்முறையாக குற்றவாளிக்கு பிணையில் விடுதலை வழங்க இயலாத ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. தண்டனை வழங்கப்பட்டு 20 நாட்களுக்குள் மேன்முறையீடு செய்ய வேண்டிய நிலையில், ஐந்து ஆண்டுகள் தாமதமாக மனு தாக்கல் செய்யப்பட்டிருப்பது சட்டரீதியாக விவாதங்களை ஏற்படுத்தியுள்ளது.
இந்த மேன்முறையீடு தங்களுக்கு அதிர்ச்சியளிப்பதாக பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.இதேவேளை, இந்த விசாரணை வெறுப்புப் பேச்சுகளைப் பரப்பும் தளமாக பயன்படுத்த அனுமதிக்கப்படாது என சட்ட நிபுணர்கள் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.
கிறைஸ்ட்சர்ச் தாக்குதலுக்கு ஒரு மாதம் கழித்து, 2019 ஏப்ரல் 21 அன்று இலங்கையில் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம்பெற்றது. கிறைஸ்ட்சர்ச் தாக்குதலுக்குப் பழிவாங்கும் நடவடிக்கையாகவே இலங்கையில் இந்தத் தற்கொலைத் தாக்குதல்கள் முன்னெடுக்கப்பட்டதாக அப்போதைய இலங்கை அரசாங்கமும் பாதுகாப்புத் தரப்பினரும் குறிப்பிட்டிருந்தனர்.