டிக்டொக்கிற்கு ஐரோப்பிய ஒன்றியம் கடும் எச்சரிக்கை!
டிக்டொக் செயலியின் வடிவமைப்பு சிறுவர்களை அதற்கு அடிமையாக்கும் வகையில் அமைந்துள்ளதாகக் கூறி, ஐரோப்பிய ஒன்றியம் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.2024 பெப்ரவரியில் தொடங்கப்பட்ட விசாரணையின் ஆரம்ப முடிவுகளை வெளியிட்ட ஐரோப்பிய ஒன்றியம், செயலியில் உள்ள சில முக்கிய அம்சங்கள் பயனர்களை போதைப்பொருளைப் போல அடிமையாக்குவதை ஊக்குவிப்பதாகக் கூறியுள்ளது.
குறிப்பாக, எல்லையற்ற ஸ்க்ரோல், தானாக இயங்கும் காணொளிகள், அறிவிப்புகள், மற்றும் தனிப்பயனாக்கப்பட்ட பரிந்துரை வழிமுறை ஆகியவை சிறுவர்களின் மன ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வுக்கு ஆபத்தாக இருக்கின்றன என்றும், இது டிஜிட்டல் சேவைகள் சட்டத்தை மீறும் செயலாகும் என்றும் ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது.
13 முதல் 18 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் நள்ளிரவுக்குப் பிறகு அதிகம் பயன்படுத்தும் சமூக ஊடகமாக டிக்டொக் உள்ளது. 12 முதல் 15 வயதுக்குட்பட்ட சிறுவர்களில் 7 சதவீதம், நாளொன்றுக்கு 4–5 மணிநேரம் வரை இந்த செயலியில் செலவழிக்கின்றனர்.
“டிக்டொக் தனது வடிவமைப்பில் மாற்றங்கள் கொண்டு சிறுவர்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்,” என்று ஐரோப்பிய ஒன்றிய தொழில்நுட்பத் தலைவர் ஹென்னா விர்க்குனென் தெரிவித்துள்ளார்.
அதேவேளை, விதிகளை மீறினால், டிக்டொக் நிறுவனத்தின் தாய் நிறுவனம் பைட் டான்ஸ் இன் உலகளாவிய வருவாயில் 6 சதவீதம் வரை அபராதம் விதிக்கப்படும் என்றும் ஐரோப்பிய ஒன்றியம் எச்சரித்துள்ளது.இந்தக் கண்டுபிடிப்புகளை முற்றாக மறுத்து, டிக்டொக் செய்தித் தொடர்பாளர், “ஒன்றியத்தின் ஆரம்ப முடிவுகள் எமது தளத்தைப் பற்றிய தவறான மற்றும் தகுதியற்ற சித்தரிப்பாகும். இதனைச் சவாலுக்கு உட்படுத்த தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்போம்,” என்று தெரிவித்தார்.