மாசிமக மஹோற்சவம்: மாத்தளை முத்துமாரியம்மன் ஆலயத்தில் நாளை கொடியேற்றம்.!
மாத்தளை அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் தேவஸ்தானத்தின் ஆண்டு தோறும் நடைபெறும் மாசிமக மஹோற்சவ திருவிழா நாளை (08) காலை கொடியேற்றத்துடன் கோலாகலமாக ஆரம்பமாகிறது.26 நாட்கள் நடைபெறும் இவ்வாண்டு மாசிமக மஹோற்சவத்தின் முக்கிய நிகழ்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. மார்ச் 1ஆம் திகதி கற்பூர சட்டி ஊர்வலம், பறவைக் காவடி ஊர்வலம் மற்றும் தீமிதிப்பு நிகழ்வுகள் இடம்பெறவுள்ளன. தொடர்ந்து மார்ச் 2ஆம் திகதி பக்தர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் பஞ்சரத பவனி நடைபெற உள்ளது.
திருவிழாவின் நிறைவுநிகழ்வாக மார்ச் 4ஆம் திகதி கொடியிறக்க நிகழ்ச்சி நடைபெறவுள்ளதுடன், மார்ச் 5ஆம் திகதி மாலை பூங்காவனம் நிகழ்வும் சிறப்பாக நடைபெறவுள்ளது.திருவிழாவை முன்னிட்டு ஆலய வளாகம் மற்றும் சுற்றுப்புறங்களில் தேவையான அனைத்து ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தேவஸ்தான அறங்காவலர் சபைத் தலைவர் விக்னேஸ்வரன் சர்வானந்தா தெரிவித்துள்ளார். பக்தர்கள் பெருமளவில் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.மாத்தளை மற்றும் அதனைச் சூழ்ந்த பகுதிகளில் இருந்து மட்டுமன்றி, நாட்டின் பல்வேறு இடங்களிலிருந்தும் பக்தர்கள் திரளாக வருகை தரவுள்ளனர் என ஆலய நிர்வாகம் குறிப்பிட்டுள்ளது.