ஒரே மாதத்தில் 3 இலட்சத்தை கடந்த சுற்றுலா வருகை – சுற்றுலா அதிகார சபை தகவல்.!
2026ஆம் ஆண்டின் ஆரம்பம் முதல் இதுவரையான காலப்பகுதியில் நாட்டிற்கு வருகை தந்த வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 3 இலட்சத்தை கடந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
ஜனவரி 1ஆம் திகதி முதல் பெப்ரவரி 4ஆம் திகதி வரை 317,381 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வந்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அவர்களில் அதிகளவானோர் இந்தியப் பிரஜைகள் ஆகும். இந்தியாவிலிருந்து 57,348 பேர் வருகை தந்துள்ளனர். அதனைத் தொடர்ந்து பிரித்தானியாவிலிருந்து 34,724 பேரும், ரஷ்யாவிலிருந்து 30,951 பேரும், ஜெர்மனியிலிருந்து 20,272 பேரும், சீனாவிலிருந்து 16,315 பேரும் நாட்டிற்கு வந்துள்ளனர்.
மேலும், பிரான்ஸ், அவுஸ்திரேலியா, நெதர்லாந்து உள்ளிட்ட பல நாடுகளிலிருந்தும் கணிசமான அளவில் சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.இதனுடன், பெப்ரவரி மாதத்தின் முதல் நான்கு நாட்களில் மட்டும் 40,054 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை குறிப்பிட்டுள்ளது.