ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் எதிர்காலம் தீர்ப்பால் தீர்மானிக்கப்படும் – தயாசிறி ஜயசேகர.!
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் மிக முக்கியமான வழக்குத் தீர்ப்பு எதிர்வரும் 17ஆம் திகதி வழங்கப்படவுள்ளது. இது கட்சியின் அடுத்த கட்ட நகர்வுகளுக்கான வழிகாட்டியாக அமையும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.கொழும்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், கட்சியை மீண்டும் கட்டியெழுப்ப வேண்டுமானால் அதன் தலைமைத்துவத்தில் மாற்றம் அவசியமாக இருப்பதாகவும் கூறினார்.
நடந்த இரண்டு–மூன்று ஆண்டுகளில், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உள்ளூராட்சி, நாடாளுமன்ற மற்றும் ஜனாதிபதி தேர்தல்களில் போட்டியிட முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும், தேர்தல் ஆணைக்குழுவால் கட்சியை செயலிழந்த நிலையில் வைத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
தற்போது கட்சி அலுவலகத்தை கைப்பற்றி வைத்துள்ளவர்களுக்கு எந்தவொரு சட்டபூர்வ அதிகாரமும் இல்லை; அதே நேரத்தில், அடிமட்டத் தொண்டர்கள் கட்சியை மீண்டும் புத்துயிர் பெறுவதற்காகக் காத்திருக்கின்றனர்.சுமார் 30 ஆண்டுகள் நாட்டை ஆட்சி செய்த ஒரு மாபெரும் கட்சியின் தலைமை நிர்ணயத்தை இந்த நீதித்துறை தீர்ப்பே தீர்மானிக்கவுள்ளதாக அவர் வலியுறுத்தி, நீதித்துறையில் முழுமையான நம்பிக்கை உள்ளதென தெரிவித்தார்.