பணி இடைநீக்கத்திற்கு எதிராக கவரவலை தோட்டத் தொழிலாளர்கள் பணி பகிஷ்கரிப்பு.!
நேற்று (05) காலை 7.30 மணியளவில் மஸ்கெலியா பிரதேச சபைக்குட்பட்ட சாமிமலை பகுதியில் அமைந்துள்ள, ஹொரண பெருந்தோட்ட நிறுவனத்திற்கு உரித்தான கவரவலை தோட்டத்தில், தோட்ட முகாமையாளர் தன்னிச்சையாக பணி இடைநீக்கம் செய்த 8 தொழிலாளர்கள், தொழிற்சங்க பேதமின்றி அதே தோட்டத்தின் ஆலய வளாகத்தில் இரவு பகலாக சத்தியாகிரகப் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.
இப் போராட்டத்திற்கு ஆதரவாக, நேற்று (05) கவரவலை தோட்டத்தின் நான்கு பிரிவுகளைச் சேர்ந்த அனைத்து தொழிலாளர்களும் பணி பகிஷ்கரிப்பில் ஈடுபட்டனர்.இன்றைய தினம் (06), கவரவலை ‘ஏ’ பிரிவு மற்றும் ‘பீ’ பிரிவு தொழிலாளர்கள் உள்ளிட்ட, பணி இடைநீக்கம் செய்யப்பட்ட 8 தொழிலாளர்கள், கடந்த 44 நாட்களாக வழங்கப்படாத ஊதியத்துடன் மீண்டும் தொழில் வழங்கப்படும் வரை பணிக்கு செல்லமாட்டோம் என்ற கோரிக்கையுடன் பணி பகிஷ்கரிப்பை தொடர்ந்துள்ளனர்.
இந்நிலையில், தொழிலாளர்களுக்கு ஆதரவாக பல தொழிற்சங்க பிரதிநிதிகள் இன்று போராட்ட இடத்திற்கு சென்று ஆதரவு தெரிவித்தனர்.குறிப்பாக, தொழிலாளர் தேசிய சங்கத்தின் செயலாளரும் தேசிய அமைப்பாளருமான இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உதவி தலைவர் மற்றும் மாவட்ட பிரதிநிதி அண்ணா சந்திரசேகரன், தொழிலாளர் கட்சி தலைவர், தேசிய மக்கள் சக்தி கட்சியின் மஸ்கெலியா பிரதேச சபை உறுப்பினர், மஸ்கெலியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு தொழிலாளர்களுக்கு ஆறுதல் கூறினர்.
இதனிடையே, நாளை (07) காலை ஹட்டன் வலய காவல் துறை தலைமை அதிகாரியின் காரியாலயத்தில், கவரவலை தோட்ட முகாமையாளர், பணி இடைநீக்கம் செய்யப்பட்ட 8 தொழிலாளர்கள் மற்றும் அவர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் தொழிற்சங்க அதிகாரிகள் இடையே பேச்சுவார்த்தை நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஹட்டன் வலய காவல் துறை தலைமை அதிகாரி தெரிவித்துள்ளார்.

