பௌத்த மத அமைப்பிற்குள் ஊடுருவி உளவு பார்த்த பெண்!
‘குவான் யின் சிட்டா தர்மா டோர்’ (Guan Yin Citta Dharma Door) எனப்படும் பௌத்த மத அமைப்பை கண்காணிக்கும் நோக்கில், சீன அரசு குறித்த பெண்ணை பணியமர்த்தியதாக அவுஸ்திரேலிய ஃபெடரல் பொலிஸ் (AFP) குற்றம் சாட்டியுள்ளது. இந்த மத அமைப்பு சீனாவில் தடை செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த பெண் கைது செய்யப்படுவதற்கு முன்பு மிகுந்த ஆடம்பர வாழ்க்கையை வாழ்ந்து வந்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. விசாரணைகளின் போது, அவரிடமிருந்து பெருமளவு ரொக்கப் பணம், விலையுயர்ந்த சொகுசு கைப்பைகள் மற்றும் 24,000 அமெரிக்க டொலர் பெறுமதியான ரோலக்ஸ் கடிகாரத்திற்கான பற்றுச்சீட்டு உள்ளிட்ட பொருட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.நாடு முழுவதும் இயங்கி வரும் குறித்த பௌத்த மத அமைப்பின் கிளைகளைப் புகைப்படம் எடுப்பது, அதன் தலைவர்கள் தொடர்பான ரகசிய தகவல்களைச் சேகரிப்பது போன்ற பணிகளில் அந்தப் பெண் ஈடுபட்டிருந்ததாகவும் நீதிமன்றத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதனிடையே, அவுஸ்திரேலிய உள்நாட்டு பாதுகாப்பு அமைப்பான ASIO, வெளிநாட்டு உளவு நிறுவனங்கள் அவுஸ்திரேலியாவில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு தீவிரமாகச் செயல்பட்டு வருவதாக எச்சரித்துள்ளது.“வெளிநாட்டு உளவு அமைப்புகள் அவுஸ்திரேலியர்களை மிக ஆக்கிரமமாக குறிவைத்து வருகின்றன” என்று ASIO பணிப்பாளர் மைக் பர்கெஸ் தெரிவித்துள்ளார்.குறித்த சீனப் பெண் மீது சட்டவிரோத வெளிநாட்டு தலையீடு (Reckless Foreign Interference) சட்டத்தின் கீழ் வழக்குத் தொடரப்பட்டுள்ளது. குற்றம் நிரூபிக்கப்பட்டால், அவருக்கு 15 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படக்கூடும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.