புதிய பலஸ்தீன நிர்வாகத்திற்கு ஒத்துழைக்க அரச ஊழியர்களிடம் ஹமாஸ் கோரிக்கை.!
காசாவில் கடமையாற்றும் தமது 10 ஆயிரம் பொலிஸ் அதிகாரிகளை அமெரிக்க ஆதரவுடனான புதிய பலஸ்தீன நிர்வாகத்தில் இணைக்க ஹமாஸ் முயற்சிகளை முன்னெடுத்துள்ளதாக தகவல்கள் வௌியாகியுள்ளன.அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் 20 அம்ச திட்டத்திற்கு அமைய கடந்த ஒக்டோபர் மாதம் முதல் நடைமுறையில் இருக்கும் யுத்த நிறுத்தத்தின் இரண்டாம் கட்டம் தற்போது ஆரம்பமாகியுள்ளது.
இந்தக் கட்டத்தில் ஆயுதக் களைவை மேற்கொள்ள ஹமாஸ் அந்த ஒப்பந்தத்தில் உடன்பட்டுள்ளது. அதற்கமைய தங்கள் காசா அரசாங்க நிர்வாகத்தில் கடமையாற்றும் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அரச ஊழியர்கள் மற்றும் பாதுகாப்புப் பணியாளர்களை அமெரிக்க மேற்பார்வையுடன் கூடிய பலஸ்தீன தொழில்நுட்ப அமைப்பான காசா நிர்வாகத்திற்கான தேசியக் குழுவுடன் ஒத்துழைக்குமாறு ஹமாஸ் வலியுறுத்தியுள்ளது.
அவர்களி்ல் 10,000 பேர் ஹமாஸ் நடத்தும் பொலிஸ் பிரிவில் கடமையாற்றுபவர்களாவர். கடந்த ஞாயிறன்று அரச ஊழியர்களுக்கு கடிதமொன்றை எழுதியுள்ள ஹமாஸ் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளதோடு புதிய அரசாங்கத்தில் இந்த ஊழியர்களை இணைக்கப் பாடுபடுவதாகவும் அவர்களுக்கு உறுதியளித்துள்ளது.
இந்நிலையில் ஹமாஸ் பேச்சாளர் ஹாசெம் காசெம், நாம் உடனடியாக 15 உறுப்பினர்களைக் கொண்ட புதிய நிர்வாகத்திடமும் அதன் தலைவர் அலி ஷாத்திடமும் தமது அரச நிர்வாகத்தை ஒப்படைக்கத் தயாராக இருப்பதாகக் ரொய்ட்டர்ஸ் குறிப்பிட்டுள்ளார்.