உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
24 திங்கள்

ஊழலை ஒழிப்பதில் அநுர அரசு உறுதி; யாராக இருந்தாலும் தப்பவே முடியாது.!

இலங்கை செய்திகள் 7 மாதங்கள் முன்
24 பார்வைகள்

“ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான தற்போதைய அரசை மக்கள் தெரிவு செய்ததற்கான பிரதான காரணமே, இதுவொரு ஊழலற்ற நிர்வாகம் என்பதால்தான். இந்த அரசுக்கு யாருடனும் இரகசியக் கொடுக்கல் வாங்கல்களோ கிடையாது. எனவே, ஊழலை ஒழிப்பதில் அரசு உறுதியாக உள்ளதுடன், தவறிழைப்பவர்களுக்கு எதிராகத் தயவுதாட்சண்யமின்றி நடவடிக்கை எடுக்கும்.” – இவ்வாறு வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்தார்.

இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவின் ஏற்பாட்டில், உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேசிய விழிப்புணர்வுச் செயற்றிட்டத்தின் முதலாவது நிகழ்வு இன்று திங்கட்கிழமை காலை கைதடியிலுள்ள வடக்கு மாகாண பிரதம செயலாளர் கேட்போர் கூடத்தில் ஆரம்பமானது.

‘நேர்மையான தேசத்தை நோக்கி’ எனும் தொனிப்பொருளில் நடைபெற்ற இந்தச் செயலமர்வில் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஆளுநர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்:
“மக்கள் நம்பிக்கை வைக்கும் அரச சேவையைக் கட்டியெழுப்ப வேண்டும் என்பதே ஜனாதிபதியின் எதிர்பார்ப்பாகும். அரச சேவையில் வெளிப்படைத்தன்மை இருந்தால் மாத்திரமே மக்களின் நம்பிக்கையை வென்றெடுக்க முடியும். எங்கள் கரங்கள் எப்போதும் தூய்மையானவையாக இருக்க வேண்டும். எதையும் எதிர்பார்த்து எங்கள் சேவைகள் அமையக் கூடாது. நேர்மையின்றிய தொழிற்பாடு சேவையாகக் கருதப்படாது.

மக்களின் அன்றாடச் செயற்பாடுகள் மற்றும் வியாபார நடவடிக்கைகளுடன் பின்னிப் பிணைந்த அரச நிர்வாகக் கட்டமைப்பு உள்ளூராட்சி மன்றங்களாகும். எனவே, இப்பிரதிநிதிகளுக்கு இலஞ்சம் மற்றும் ஊழல் தொடர்பான தெளிவான அறிவு அவசியம். சில சந்தர்ப்பங்களில் ‘அன்பளிப்பு’ என்ற பெயரில் வழங்கப்படும் பொருட்கள் கூட இலஞ்சமாகவே கருதப்படும் என்பதைப் பிரதிநிதிகள் புரிந்துகொள்ள வேண்டும்.

கட்டட அனுமதி, வியாபார அனுமதி, சோலை வரி மாற்றம் உள்ளிட்ட சேவைகளை உடனடியாகச் செய்து கொடுக்க முடியும். ஆனால், சில இடங்களில் இவை வேண்டுமென்றே தாமதப்படுத்தப்படுகின்றன. இத்தகைய இழுத்தடிப்புக்கள் இலஞ்சம் பெற்றுக்கொள்ளும் நோக்கில் செய்யப்படுவதாகவே கருதப்படும். இவ்வாறான செயற்பாடுகளுக்குத் தற்போதைய நிர்வாகத்தில் இடமில்லை.

கடந்த காலங்களில் அரசியல் தலைமைத்துவங்களால் பிழையானவற்றைச் செய்வதற்கு நீங்கள் தூண்டப்பட்டிருக்கலாம். ஆனால் தற்போதைய அரசின் காலத்தில் அவ்வாறான எந்தவொரு விடயங்களும் நடைபெறப்போவதில்லை. எனவே, உள்ளூராட்சி மன்றங்கள் சிறப்பான, நேர்மையான சேவையை வழங்க வேண்டும்.” – என்றார்.

வடக்கு மாகாணத்தில் மூன்று நாட்கள் முன்னெடுக்கப்படவுள்ள இந்தச் செயற்றிட்டத்தின் முதல் நாளான இன்று, யாழ். மாநகர சபை மற்றும் யாழ். மாவட்டத்தின் 7 பிரதேச சபைகளின் (வலிகாமம் வடக்கு, வலிகாமம் மேற்கு, வலிகாமம் தென்மேற்கு, காரைநகர், ஊர்காவற்றுறை, நெடுந்தீவு, வேலணை) தவிசாளர்கள் மற்றும் உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.

இந்தச் செயலமர்வில் இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவின் உதவிப் பணிப்பாளர் (சட்டம்) எஸ்.எம்.சப்ரி தொடக்கவுரையாற்றினார். வடக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் எஸ்.சுதர்சன் வரவேற்புரையாற்றினார்.

வளவாளர்களாகக் கலந்துகொண்ட இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவின் ஆணையாளர் ஜனாதிபதி சட்டத்தரணி செத்திய குணசேகர மற்றும் வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் ம.பற்றிக் டிரஞ்சன் ஆகியோர், ‘ஊழலற்ற உள்ளூராட்சி மன்றங்களைக் கட்டியெழுப்புதல்’, ‘ஊழலை எதிர்ப்பதில் உள்ளூராட்சிப் பிரதிநிதிகளின் பங்கு’ மற்றும் ‘சட்டப் பின்னணி’ ஆகிய தலைப்புகளில் விரிவுரையாற்றினர்.

சாவகச்சேரி நகர சபை மண்டபத்தில் – வல்வெட்டித்துறை, பருத்தித்துறை, சாவகச்சேரி நகர சபைகள் மற்றும் யாழ். மாவட்டத்தின் ஏனைய பிரதேச சபைகளுடன் கிளிநொச்சி மாவட்டத்தின் 4 பிரதேச சபைகளின் பிரதிநிதிகளுக்கான செயலமர்வு நாளை செவ்வாய்கிழமை நடைபெறும்.

வவுனியா மாநகர சபை மண்டபத்தில் – வவுனியா, முல்லைத்தீவு, மன்னார் ஆகிய மாவட்டங்களின் உள்ளூராட்சி மன்றப் பிரதிநிதிகளுக்கான செயலமர்வு நாளை மறுதினம் புதன்கிழமை நடைபெறும்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

புதுப்பிக்கத்தக்க எரிசக்தி கட்டணங்கள் மற்றும் புதிய விதிமுறைகள் தொடர்பில் ஊடகவியலாளர் சந்திப்பு.!

கொழும்பிலுள்ள இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் (PUCSL) தலைமையகத்தில் புதுப்பிக்கத்தக்க மின்சார சக்திக்கான கட்டணங்கள் மற்றும் புதிய ஒழுங்குமுறைகள் தொடர்பில் விசேட ஊடகவியலாளர் சந்திப்பொன்று இன்றையதினம் (24)…

49 0 0
இலங்கை செய்திகள்

யாழ். வலிகாமம் தெற்கு பிரதேச சபையின் புதிய உள்ளக விளையாட்டு அரங்குக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு.!

யாழ்ப்பாணம் – வலிகாமம் தெற்கு பிரதேச சபையின் புதிய உள்ளக விளையாட்டு அரங்குக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு இன்று காலை, பிரதேச சபையின் தலைமை அலுவலக வளாகத்தில்…

34 0 0
இலங்கை செய்திகள்

யாழில் தங்கச் சங்கிலியை உரிமையாளரிடம் ஒப்படைத்த பேருந்து சாரதியும், நடத்துனரும்.!

இ.போ.ச. பேருந்தில் பெண் பயணி ஒருவர் தொலைத்த 10 இலட்சம் ரூபாய் பெறுமதியான தங்கச் சங்கிலியை மீட்ட நடத்துநரும் சாரதியும், உரியவரிடமே அந்த நகையை ஒப்படைத்துள்ளனர். இந்தச்…

54 0 0
இலங்கை செய்திகள்

தியவன்னா ஓயாவில் விழுந்த பெண் கடற்படையினரால் மீட்பு.!

பத்தரமுல்ல, ஜப்பான் நற்புறவு வீதியின் சதுன் உயன பகுதியில் இன்று (24) நண்பகல் தியவன்னா ஓயா ஆற்றில் விழுந்த 59 வயதுடைய பெண்ணொருவர் இலங்கை கடற்படையினரால் பாதுகாப்பாக…

61 0 0