முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் சிகிச்சையின் போது உயிரிழந்த சிறுமி டினோஜாவுக்கு நீதி கோரி இன்று திங்கட்கிழமை ஆர்ப்பாட்டம் இடம்பெறவுள்ளது. இந்தப் போராட்டத்துக்கு பல்வேறு தரப்பினரும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
முல்லைத்தீவு – சிலாவத்தை பகுதியைச் சேர்ந்த குகநேசன் டினோஜா (வயது 12) என்ற சிறுமி திடீர் சுகவீனம் காரணமாக முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டிருந்த நிலையில், கடந்த 21ஆம் திகதி சிகிச்சையின் போது உயிரிழந்தார். மருத்துவத் தவறு காரணமாகவே, இந்த இறப்புச் சம்பவித்தது என்று சிறுமியின் உறவினர்கள் குற்றஞ்சாட்டினர்.
இந்த விடயம் தொடர்பில் முல்லைத்தீவு மாவட்டத்தில் இடம்பெற்ற ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்களிலும் விவாதிக்கப்பட்டதுடன், மேலதிக விசாரணைகளும் இடம்பெற்று வருகின்றன.
இவ்வாறான பின்னணியிலேயே, சிறுமியின் இறப்புக்கு நீதி கோரி, முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலைக்கு முன்பாக இன்று காலை கவனயீர்ப்புப் போராட்டம் இடம்பெறவுள்ளது.
இந்தப் போராட்டத்துக்கு வணிக நிறுவனங்கள், அழகக சங்கங்கள் எனப் பல தரப்புகளும் தமது ஆதரவைத் தெரிவித்துள்ளன. அத்துடன், ஏனையோரின் ஆதரவையும் அந்தத் தரப்பினர் கோரியுள்ளனர்.










