வவுனியாவின் புதுக்குளம் – மூனாமடு வீதியில் மேம்பாலம் அமைத்தல் மற்றும் உக்குளாங்குளம் முனியப்பர் கோவில் வீதிக்கான வடிகாலமைப்பு மேற்கொள்ளல் ஆகியவற்றுக்கு நிதியொதுக்கீடு மேற்கொள்ளுமாறு கடந்த 09.12.2025 அன்று இடம்பெற்ற வவுனியா மாவட்ட அபிவிருத்திக் குழு கூட்டத்தில் வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபையின் தவிசாளர் பா.பாலேந்திரன் அவர்கள் கோரிக்கை விடுத்திருந்தார்.
கூட்டத்தில் கலந்துகொண்டிருந்த இலங்கைத் தமிழரசுக் கட்சியின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மருத்துவர் ப.சத்தியலிங்கம் அவர்களும் குறித்த கோரிக்கைக்கு வலுச்சேர்க்கும் வகையில் கருத்து தெரிவித்தார்.
அண்மையில் இடம்பெற்ற பேரிடரின் போது கூட குறித்த புதுக்குளம் – மூனாமடு வீதியில் வெள்ள நீர் கனிசமான அளவு உயரத்திற்கு பாய்ந்திருந்தது. இதனால் அப்பகுதி மக்கள் கடும் இன்னல்களை எதிர்கொண்டிருந்தனர். குறித்த வீதியால் மழை நேரங்களில் பயணிக்க முடியாத நிலை காணப்படுகின்றது. ஆகவே குறித்த வீதியில் மழை நேரங்களிலும் பயணிக்க ஏதுவான அடிப்படையில் மேம்பாலம் ஒன்றினை குறித்த இடத்தில் அமைக்க அரசு நிதியொதுக்கீடு செய்யவேண்டுமென கேட்டுக்கொண்டார்.
அத்துடன் உக்குளாங்குளம் முனியப்பர் கோவில் வீதியில் உரிய வடிகாலமைப்பு இன்மையால் மழை நேரங்களில் நீர்வெளியேறும் பிரச்சினை காணப்படுவதால் உடனடியாக வடிகாலமைப்பு கட்டுமானம் செய்ய வேண்டும். அதற்கும் நிதியொதுக்கீடு செய்ய வேண்டும் என தெரிவித்தார்.
இதனையடுத்து பதிலளித்த மாவட்ட அபிவிருத்திக் குழு தலைவர் மற்றும் மாவட்ட அரசாங்க அதிபர் ஆகியோர் குறித்த இரு விடயங்களுக்குமான மதிப்பீட்டினை செய்து சமர்ப்பிக்குமாறும், அதற்குரிய நிதியினை ஒதுக்கீடு செய்து தருவதாகவும் தெரிவித்தனர்.
இது குறித்து எழுத்துமூலமான கோரிக்கையும் அரசாங்க அதிபரினால் வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபை தலைவருக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தது.
இதன் பிரகாரம், தற்போது குறித்த இரு வேலைத்திட்டங்களுக்குமான மதிப்பீடுகள் மேற்கொள்ளப்பட்டு வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபையினால் மாவட்ட செயலகத்திற்கும், அனர்த்த முகாமைத்துவ பிரிவிற்கும் அனுப்பிவைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.











