தற்போதைய அனர்த்த நிலைமை தொடர்பான சிறப்பு முல்லைத்தீவு மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் முல்லைத்தீவு மாவட்ட செயலக பண்டாரவன்னியன் மாநாட்டு மண்டபத்தில், பொதுப் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால, அவர்களின் தலைமையில் நடைபெற்றுள்ளது.
முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் அ.உமாமகேஸ்ரன் அவர்களின் சிறப்பான ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இந்த சிறப்பு முல்லைத்தீவு மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவரும் கூட்டுறவு இராஜாங்க அமைச்சருமான உபாலி சமரசிங்க நாடாளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன், து.ரவிகரன், திலகநாதன், ம.ஜெகதீஸ்வரன் உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டனர்.
இவர்களோடு வடக்கு மாகாண பிரதம செயலாளர், மாகாண செயலாளர்கள், திணைக்கள தலைவர்கள், அதிகாரிகள், முப்படையினர் உள்ளிட்டவர்கள் கலந்துகொண்ட இந்த கூட்டத்தில் மாவட்டத்தில் ஏற்பட்ட அனர்த்தத்தின் பின்னரான நிலைமைகள் தொடர்பில் ஆராயப்பட்டுள்ளது.
கூட்ட நிறைவில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அமைச்சர்,
வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வாதாரம் மற்றும் அடிப்படை வசதிகளை மிக விரைவாக மீட்டெடுப்பதற்கான தேவைப்பாடுகள் குறித்து ஆராய்வதற்காக ஜனாதிபதி அவர்களின் உத்தரவிற்கு அமைய முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் பிரதி அமைச்சர் உபாலி சமரசிங்க ஆகியோரால் இந்த கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதில் தனிப்பட்ட சேத விபரங்களுக்கான இழப்பீடுகளை மிக விரைவாக வழங்குதல் பாடசாலை மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்களுக்கான கொடுப்பனவுகள், விவசாய கால்நடைகளுக்கான இழப்பீட்டு கொடுப்பனவுகளை மிக விரைவாக வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டது என்று தெரிவித்துள்ளார்.



















