வவுனியா கந்தபுரம் வாணி வித்தியாலயத்தில் திருமூலர் அவர்களின் குருபூசை தினம் சிறப்பாக இடம்பெற்றது.
வவுனியா சேக்கிழார் மன்றத்தின் ஏற்பாட்டில் இந்நிகழ்வு பாடசாலை காலை கூட்ட பிரார்த்தனையின் போது பாடசாலை அதிபர் எஸ்.சண்முகரட்ணம் தலைமையில் இடம்பெற்றது.
திருமூலர் 63 நாயன்மார்களில் ஒருவராகவும், 18 சித்தர்களில் ஒருவராகவும் கருதப்படும் ஒரு ஞானி ஆவார்.
அவர் இந்தியாவின் திருக்கயிலையில் சிவயோகியாக வாழ்ந்து, பின்னர் சாத்தனூர் என்ற ஊரில், மூலன் என்ற இடையனின் உடம்புக்குள் தன் உயிரைச் செலுத்தி, காலத்தை வென்று வாழ்ந்ததாகக் கூறப்படுகிறது.
அவர் இயற்றிய புகழ்பெற்ற நூலான திருமந்திரம் பன்னிரு திருமுறைகளில் பத்தாம் திருமுறையாக இடம்பெற்றுள்ளது.
அவரது குருபூஜை தினத்தை முன்னிட்டு நடைபெற்ற இந்நிகழ்வில் செட்டிகுளம் பிரதேச செயலக இந்து கலாச்சார உத்தியோகத்தர் சி.கஜேந்திரகுமார் அவர்கள் திருமூலர் காட்டிய வழியும் கூறிய கருத்துக்களும் என்னும் தலைப்பில் உரையாற்றினார்.
இந்நிகழ்வில் வவுனியா சேக்கிழார் மன்றத்தின் செயலாளர் கி.வசந்தரூபன், சேக்கிழார் மன்றத்தின் பொருளாளர் த.சலசலோசன், பாடசாலையின் பிரதி அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.













