‘சவூதி அரம்கோ’ எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தின் மீது தாக்குதல்!
சவூதி அரேபியாவின் ஜசான் (Jazan) நகரில் அமைந்துள்ள ‘சவூதி அரம்கோ’ எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் மீது, ஈரான் ஆதரவு பெற்ற யேமனின் ஹூதி கிளர்ச்சியாளர்கள் நேற்று தாக்குதல் நடத்தியுள்ளதாக சவூதி தலைமையிலான இராணுவக் கூட்டணி தெரிவித்துள்ளது.
சவூதியின் மிகப்பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் தாக்கப்பட்ட மறுநாளே இந்தத் தாக்குதலும் நடத்தப்பட்டுள்ளது.
யேமன் எல்லைக்கு அருகிலுள்ள தென்மேற்கு நகரமான ஜசானில் அமைந்துள்ள இந்தச் சுத்திகரிப்பு நிலையம், நாளொன்றுக்கு சுமார் 4 இலட்சம் பீப்பாய்கள் மசகு எண்ணெயைச் சுத்திகரிக்கும் திறன் கொண்டது.
இந்தத் தாக்குதலுக்குப் பயன்படுத்தப்பட்டதாகக் கருதப்படும் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை ஏவுதளம் ஒன்றை, யேமனின் ஹொடைடா (Hodeidah) துறைமுக நகரில் வைத்து அழித்துவிட்டதாக சவூதி கூட்டணி அறிவித்துள்ளது.
பொதுமக்கள் மற்றும் சிவில் உட்கட்டமைப்புகளை இலக்கு வைப்பதற்குக் கடுமையான இராணுவப் பதிலடி கொடுக்கப்படும் எனவும் அந்தக் கூட்டணி எச்சரித்துள்ளது.
முன்னதாக, சவூதியின் மிகப்பெரிய எண்ணெய் ஏற்றுமதி மையமான ராஸ் தனுரா (Ras Tanura) மற்றும் செங்கடல் துறைமுகங்களான ஜெட்டா, ஜசான் ஆகியவற்றின் மீது புதன்கிழமை தாக்குதல் நடத்தியதாக ஹூதி கிளர்ச்சியாளர்கள் உரிமை கோரியிருந்தனர்.
எனினும், ராஸ் தனுரா வான்பரப்பில் 4 ஆளில்லா விமானங்களையும், ஜெட்டா துறைமுகத்திற்கு அருகே ஒரு ஆளில்லா விமானத்தையும் தமது வான் பாதுகாப்புப் படைகள் இடைமறித்து அழித்ததாக சவூதி கூட்டணி கூறியுள்ளது.
அமெரிக்கா – ஈரான் போரின் எதிரொலியாகக் கடந்த ஜூலை மாதம் யேமனில் மீண்டும் உள்நாட்டுப் போர் வெடித்தது.
இதனைத் தொடர்ந்து, தலைநகர் சனா உள்ளிட்ட யேமனின் மக்கள் தொகை அதிகம் கொண்ட பகுதிகளைத் தமது கட்டுப்பாட்டில் வைத்துள்ள ஹூதி கிளர்ச்சியாளர்கள், சவூதியின் விமான நிலையங்கள், எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் மற்றும் அலுவலகக் கட்டடங்களை இலக்கு வைத்து ஏவுகணை மற்றும் ஆளில்லா விமான தாக்குதல்களை நடத்தி வருகின்றனர்.
இந்தத் தாக்குதல்களால் சவூதி அரம்கோ நிறுவனத்தின் செயற்பாடுகள் தற்காலிகமாகப் பாதிக்கப்பட்டதுடன், ரியாத் நகருக்கான பெரும்பாலான சர்வதேச விமானச் சேவைகளும் இரத்து செய்யப்பட்டன.
மேலும், ஆசியக் கிண்ணக் கால்பந்துப் போட்டி மற்றும் முக்கிய முதலீட்டு மாநாடு உள்ளிட்ட சர்வதேச நிகழ்வுகளைச் சவூதி அரேபியா ஒத்திவைக்கவோ அல்லது இரத்து செய்யவோ வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
கடந்த செப்டம்பர் மாதம் யேமனின் செங்கடல் கரையோரப் பகுதிகளைக் கைப்பற்றிய ஹூதிகள், வளைகுடா எண்ணெய் உற்பத்தியாளர்களின் முக்கிய கப்பல் போக்குவரத்துப் பாதையான பாப் எல்-மண்டேப் (Bab el-Mandeb) நீரிணையை நோக்கி முன்னேறியதைத் தொடர்ந்து அப்பிராந்தியத்தில் மோதல்கள் தீவிரமடைந்துள்ளன.


