பாகிஸ்தான் வீரருடன் நேருக்கு நேர் மோதிய ஹர்ஷித் ராணா!
ஆசியக் கிண்ண வளர்ந்து வரும் வீரர்களுக்கான தொடரில் இந்தியா ஏ மற்றும் பாகிஸ்தான் ஏ அணிகளுக்கு இடையிலான போட்டியின்போது, இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஹர்ஷித் ராணாவுக்கும் பாகிஸ்தான் துடுப்பாட்ட வீரர் மொஹமட் இம்ரான் ரந்தாவாவுக்கும் இடையில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
கத்தாரின் தோஹாவில் நடைபெற்ற இந்தப் போட்டியில், பாகிஸ்தான் அணியின் துடுப்பாட்டம் இடம்பெற்றபோது 40ஆவது ஓவரில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
ஹர்ஷித் ராணா வீசிய பந்தை எதிர்கொண்ட ரந்தாவா, ஓட்டமொன்றைப் பெறுவதற்காக ஓடியபோது இருவருக்கும் இடையில் தோளுடன் தோள் உரசியதாக தெரிவிக்கப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த ஹர்ஷித் ராணா, பாகிஸ்தான் வீரரை நோக்கி முன்னேறியதுடன், இருவருக்கும் இடையில் கடுமையான வார்த்தைப் பரிமாற்றமும் இடம்பெற்றுள்ளது.
நிலைமை மேலும் மோசமடைவதைத் தடுக்கும் வகையில் மைதான நடுவர் உடனடியாகத் தலையிட்டு இருவரையும் சமாதானப்படுத்தியுள்ளார்.
இதற்கு முன்னரும் குறித்த போட்டியில் பாகிஸ்தான் வீரர் ஷமில் ஹுசைனுடன் ஹர்ஷித் ராணா வாக்குவாதத்தில் ஈடுபட்டிருந்ததுடன், அவரை ஆட்டமிழக்கச் செய்த பின்னரும் ஆக்ரோஷமான முறையில் கொண்டாட்டத்தில் ஈடுபட்டிருந்தார்.
இந்தியா – பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டி ஆரம்பமாவதற்கு முன்னரே இரு அணித் தலைவர்களும் கைகுலுக்கிக் கொள்ளாத நிலையில், மைதானத்திலும் ஏற்பட்ட இந்தச் சம்பவங்கள் போட்டியின் பரபரப்பை மேலும் அதிகரித்துள்ளன.


