மோட்டார் சைக்கிளும் லொறியும் மோதி கோர விபத்து: 23 வயது இளைஞன் உயி@ரிழப்பு
அம்பாறை மாவட்டம், சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மல்வத்தைப் பகுதியில் இன்று (20) வெள்ளிக்கிழமை மாலை இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் மற்றும் லொறி ஆகியன மோதிய கோர விபத்தில் 23 வயதுடைய இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், அவருடன் பயணித்த 21 வயதுடைய மற்றொரு இளைஞர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மல்வத்தைப் பகுதியில் பயணித்துக்கொண்டிருந்த மோட்டார் சைக்கிளும் லொறியும் நேருக்கு நேர் மோதி இவ்விபத்து ஏற்பட்டுள்ளது. விபத்தில் படுகாயமடைந்த மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவரும் உடனடியாக அம்பாறை மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதிலும், 23 வயது மதிக்கத்தக்க இளைஞர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். காயமடைந்த 21 வயதுடைய மற்றைய இளைஞர் தொடர்ந்து தீவிர சிகிச்சை பெற்று வருகின்றார்.
மோட்டார் சைக்கிளில் பயணித்தவர்களின் கவனயீனமான மற்றும் தவறான சாரத்தியத்தினாலேயே இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
கிழக்கு மாகாணத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் மகேஷ் சேனாரத்ன அவர்களின் பணிப்புரையிலும், அம்பாறை மாவட்டப் பிரதிப் பொலிஸ்மா அதிபர் சுஜித் வேதமுல்ல அவர்களின் உத்தரவின் பேரிலும், அம்பாறை மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பிரியந்த பண்டார கஸ்தூரி ஆரச்சி அவர்களின் வழிநடத்தலிலும், கல்முனை பிராந்திய உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் இப்னு அசார் அவர்களின் நெறிப்படுத்தலிலும், சம்மாந்துறை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி டபிள்யூ.ஏ.என். நிசாந்த பிரதீப் குமார அவர்களின் ஆலோசனையின் கீழ் சம்மாந்துறை போக்குவரத்துப் பொலிஸார் இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.





