மட்டக்களப்பின் சுற்றுச்சூழல் அழிவுக்கு அரசாங்கமே பொறுப்பேற்க வேண்டும்
கட்டுமானக் கனிம வளங்களான கல், மணல், சரளை, மண் மற்றும் செங்கல் களிமண் அகழ்வுக்கான அனுமதிப்பத்திரங்களை வழங்குவதில் பின்பற்றப்படும் சட்ட அடிப்படை, புதிய வழிகாட்டுதல்களின் சட்டபூர்வத்தன்மை மற்றும் அவற்றால் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்புகள் தொடர்பில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்றக் குழுத் தலைவரும் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான சாணக்கியன் இராசமாணிக்கம், நாடாளுமன்றத்தில் பல கேள்விகளை முன்வைத்தார்.
நாடாளுமன்றத்தில் இன்று (20.11.2026) நடைபெற்ற கேள்வி – பதில் நேரத்தின்போது, கைத்தொழில் மற்றும் தொழில்முயற்சி அபிவிருத்தி அமைச்சரிடம் பல்வேறு முக்கிய கேள்விகளை முன்வைத்தார்.
நிலையியற் கட்டளை 27(2) இன் கீழ் இந்தக் கேள்விகளை முன்வைத்த அவர், 1992 ஆம் ஆண்டின் 33 ஆம் இலக்க சுரங்கங்கள் மற்றும் கனிமப் பொருட்கள் சட்டம், 2009 ஆம் ஆண்டின் 66 ஆம் இலக்க திருத்தச் சட்டம் மற்றும் அதனுடன் தொடர்புடைய ஒழுங்குவிதிகள் நடைமுறையில் இருக்கும்போது, கனிம அகழ்வு அனுமதிப்பத்திரங்களை விரைவுபடுத்துவதற்காக ஜனாதிபதி செயலணியின் வழிகாட்டுதல்கள் பயன்படுத்தப்படுவது தொடர்பில் தனது கவலையை வெளிப்படுத்தினார்.
2026.07.06 அன்று மேற்கொள்ளப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்திற்கு அமைவாக, 2026.08.31 திகதியிடப்பட்ட கைத்தொழில் வழிகாட்டுதல் இலக்கம் 01/2026 மூலம் மாவட்ட கண்காணிப்புக் குழுக்கள் நிறுவப்பட்டு, செப்டெம்பர் 01 ஆம் திகதி முதல் கனிம அகழ்வு அனுமதிப்பத்திரங்களுக்கான விண்ணப்பங்களை அக்குழுக்களுக்கு அனுப்புமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
குறித்த வழிகாட்டுதல்கள் நாடாளுமன்றத்தினால் நிறைவேற்றப்பட்ட சட்டங்களோ அல்லது சட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்ட ஒழுங்குவிதிகளோ அல்லாத நிலையில், அவற்றின் அடிப்படையில் அனுமதிப்பத்திரங்களை வழங்குவதற்கான சட்ட அதிகாரம் என்னவென்பதை அரசாங்கம் தெளிவுபடுத்த வேண்டும் எனக் கோரினார். மேலும், இவ்வழிகாட்டுதல்களின் சட்டபூர்வத்தன்மை தொடர்பில் சட்டமா அதிபரின் ஆலோசனை பெறப்பட்டுள்ளதா என்றும் கேள்வி எழுப்பினார்.
கனிம வளங்கள் மீளுருவாக்கம் செய்ய முடியாத இயற்கை வளங்களாகும். எனவே, உரிய தொழில்நுட்ப, சுற்றுச்சூழல் மற்றும் வள மதிப்பீடுகள் இன்றி அகழ்வு அனுமதிப்பத்திரங்களை விரைவுபடுத்துவது எதிர்காலத்தில் கனிம வளங்கள் தீர்ந்துபோகவும், பாரிய சுற்றுச்சூழல் பாதிப்புகள் ஏற்படவும் வழிவகுக்கும் என அவர் எச்சரித்தார். இயற்கை வளங்களைப் பாதுகாப்பதுடன் எதிர்காலத் தலைமுறையினரின் தேவைகளையும் கட்டுமானத் துறையின் நீண்டகால நிலைத்தன்மையையும் கருத்திற்கொண்டு இவ்விடயம் கையாளப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
இதன்போது தனது கடந்தகால சுற்றுச்சூழல் பாதுகாப்புப் போராட்டங்களையும் நினைவுபடுத்திய சாணக்கியன் எம்.பி.,
“கடந்த காலங்களில் சுற்றுச்சூழல் பாதிப்புகளுக்கு எதிராக ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க என்னுடன் இணைந்து போராடினார். அவர் எனது போராட்டத் தோழராகவும் இருந்தார். ஆனால் இன்று நான் தனியாகப் போராடிக்கொண்டிருக்கின்றேன். இது எனக்கு வேதனையளிக்கின்றது” எனத் தெரிவித்தார்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் கனிம அகழ்வு அனுமதிப்பத்திரங்களை வழங்குவதில் காணப்படும் நடைமுறைச் சிக்கல்களையும் அவர் சுட்டிக்காட்டினார்.
மாவட்டத்தில் ஒரு குழுவின் அனுமதியுடன் கனிம அகழ்வு அனுமதிப்பத்திரங்கள் வழங்கப்படுவதாகக் குறிப்பிடப்படும் நிலையில், நகர சபை அனுமதி கோரும்போது அதனைப் பெற முடியாத நிலை காணப்படுவதாகவும், அதேவேளை தனியார் தரப்பினர் கோரும்போது அனுமதிகளைப் பெற்றுக்கொள்ள முடிவதாகவும் குறிப்பிட்டார். இத்தகைய முரண்பாடான நடைமுறைகள் தொடர்பிலும் அரசாங்கம் விளக்கமளிக்க வேண்டும் எனக் கோரினார்.
மேலும், கனிம அகழ்வு அனுமதிப்பத்திரங்களுடன் தொடர்புடைய நிபந்தனைகள், சுற்றுச்சூழல் பாதுகாப்புத் தேவைகள், அரசாங்கக் கட்டணங்கள், போக்குவரத்து அனுமதிப்பத்திரங்கள் மற்றும் கண்காணிப்பு முறைமைகள் ஆகியவை தளர்த்தப்பட்டுள்ளனவா என்றும், அவ்வாறு தளர்த்தப்பட்டிருந்தால் எந்தச் சட்ட அதிகாரத்தின் கீழ் அவை மேற்கொள்ளப்பட்டுள்ளன என்றும் கேள்வி எழுப்பினார்.
மாவட்டக் கண்காணிப்புக் குழுக்களின் பரிந்துரைகள் சுரங்கங்கள் மற்றும் கனிமப் பொருட்கள் பணியகத்தின் பணிப்பாளர் நாயகத்தைக் கட்டுப்படுத்துகின்றனவா? விண்ணப்பங்களைப் பரிசீலிப்பதற்காக வழங்கப்பட்டுள்ள ஏழு நாட்கள் கால அவகாசம் உரிய தொழில்நுட்ப மற்றும் சுற்றுச்சூழல் மதிப்பீடுகளை மேற்கொள்வதற்குப் போதுமானதா? என்பன உள்ளிட்ட கேள்விகளையும் முன்வைத்தார்.
அத்துடன், குறித்த வழிகாட்டுதல்கள், அவற்றில் மேற்கொள்ளப்பட்ட திருத்தங்கள், அமைச்சரவைத் தீர்மானம் மற்றும் அதனுடன் தொடர்புடைய அமைச்சரவைப் பத்திரம் ஆகியவற்றை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்க முடியுமா என்றும் கேட்டுக்கொண்டார்.
கனிம அகழ்வு அனுமதிப்பத்திரங்கள் வழங்கப்பட்டுள்ளமை தொடர்பான முழுமையான தரவுகளையும் அவர் கோரினார். குறிப்பாக, 2024, 2025 மற்றும் 2026 ஆம் ஆண்டுகளில் மாவட்ட ரீதியாக வழங்கப்பட்ட மற்றும் புதுப்பிக்கப்பட்ட அனுமதிப்பத்திரங்களின் எண்ணிக்கை, 2026 செப்டெம்பர் மாதம் முதல் கிடைக்கப்பெற்ற விண்ணப்பங்கள், நிராகரிக்கப்பட்ட விண்ணப்பங்கள், நிலுவையில் உள்ள விண்ணப்பங்கள் மற்றும் அவற்றைச் செயலாக்குவதற்கான சராசரிக் காலம் ஆகியவற்றை வெளிப்படுத்துமாறு கேட்டார்.
மேலும், விரைவுபடுத்தப்பட்ட அனுமதிப்பத்திரச் செயல்முறையினால் கனிம அகழ்வு நடவடிக்கைகள், எஞ்சியுள்ள கனிம வள இருப்புகள் மற்றும் சுற்றுச்சூழல் ஆகியவற்றில் ஏற்படக்கூடிய தாக்கங்கள் குறித்து ஏதேனும் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளனவா என்றும், அவ்வாய்வு அறிக்கைகளைப் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்க முடியுமா என்றும் கேள்வி எழுப்பினார்.
இயற்கை மணல் மற்றும் ஏனைய கனிம வளங்களின் பயன்பாட்டைக் குறைப்பதற்கான மாற்றுத் திட்டங்கள் தொடர்பிலும் அவர் கவனம் செலுத்தினார். தயாரிக்கப்பட்ட மணல் (Manufactured Sand) பயன்பாடு, மாற்றுக் கட்டுமானப் பொருட்களின் அறிமுகம், கட்டுமானக் கழிவுகளை மீள்சுழற்சி செய்தல் மற்றும் இயற்கைக் கனிம வளங்களின் பயன்பாட்டைக் குறைத்தல் தொடர்பில் தேசியக் கொள்கையொன்று நடைமுறையில் உள்ளதா என்றும், அவ்வாறான கொள்கை இல்லையெனில் எப்போது அறிமுகப்படுத்தப்படும் என்றும் கேள்வி எழுப்பினார்.
அதேபோன்று, தற்போது பின்பற்றப்படும் அனுமதிப்பத்திரம் வழங்கும் செயல்முறையை எப்போது சட்டபூர்வமான ஒழுங்கு விதிகளின் கீழ் கொண்டுவர அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் என்றும் வினவினார்.
இதன்போது மட்டக்களப்பு மாவட்டத்தில் அண்மைக்காலமாக இடம்பெற்று வரும் கனிம அகழ்வுகளால் ஏற்பட்டுள்ள சுற்றுச்சூழல் பாதிப்புகள் தொடர்பில் கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.
“மண் போன்ற இயற்கை வளங்களை மீளுருவாக்கம் செய்ய முடியாது. எனவே, மண் வளத்தைப் பாதுகாப்பது மிகவும் அவசியமானதாகும். தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட மணல் அகழ்வு அனுமதிப்பத்திரங்கள் காரணமாக கடந்த மூன்று மாத காலப்பகுதியில் மட்டக்களப்பு மாவட்டத்தின் பல பகுதிகளில் பாரிய சுற்றுச்சூழல் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன” எனத் தெரிவித்தார்.
இதற்கான ஆதாரங்களாகப் பாதிக்கப்பட்ட பகுதிகளின் புகைப்படங்களையும் நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்தார். அனுமதிப்பத்திரங்களை விரைவுபடுத்தும் நடவடிக்கைகளின் பெயரில் இயற்கை வளங்களும் சுற்றுச்சூழலும் அழிக்கப்படுவதற்கு இடமளிக்கக்கூடாது என்றும் அவர் வலியுறுத்தினார்.
தொடர்ந்து சாபி நகர் சம்பவம் தொடர்பிலும் கருத்துத் தெரிவித்த சாணக்கியன் எம்.பி., அந்தச் சம்பவம் இடம்பெற்று நான்கு ஆண்டுகள் நிறைவடைந்துள்ள போதிலும், இதுவரை பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்கவில்லை எனச் சுட்டிக்காட்டினார்.
அந்தச் சம்பவம் தொடர்பில் கடந்த காலங்களில் குரல் கொடுத்த தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர்கள் இன்று மௌனமாக இருப்பதாகவும், அச்சம்பவத்துடன் தொடர்புடைய மக்களுக்கு இதுவரை நீதி வழங்கப்படாமை கவலையளிப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
இயற்கை வளங்களைப் பாதுகாப்பது, சுற்றுச்சூழல் பாதிப்புகளைத் தடுப்பது, கனிம அகழ்வு அனுமதிப்பத்திரங்களைச் சட்டபூர்வமான நடைமுறைகளின் கீழ் வழங்குவது மற்றும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி பெற்றுக்கொடுப்பது ஆகிய விடயங்களில் அரசாங்கம் பொறுப்புடன் செயற்பட வேண்டும் என்பதையே தனது கேள்விகள் மற்றும் கருத்துகள் மூலம் சாணக்கியன் இராசமாணிக்கம் எம்.பி. வலியுறுத்தினார்.


