கோர விபத்தில் சிறுவன் உ**யிரிழப்பு.!
அம்பாந்தோட்டை – வலஸ்முல்லை பகுதியில் உந்துருளி மீது சிற்றூர்தி ஒன்று மோதி இடம்பெற்ற கோர விபத்தில் 8 வயதுடைய பாடசாலைச் சிறுவன் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
வலஸ்முல்லை பகுதியைச் சேர்ந்த மேற்படி சிறுவன், தனது தனியார் வகுப்பை நிறைவு செய்துவிட்டுத் தந்தையுடன் உந்துருளியில் வீடு திரும்பிக்கொண்டிருந்த வேளையிலேயே இந்தத் துயரச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இவர்கள் பயணித்த உந்துருளிக்குப் பின்னால் அதிவேகமாக வந்த சிற்றூர்தி ஒன்று, சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து உந்துருளி மீது பலமாக மோதியுள்ளது என்று பொலிஸாரின் முதற்கட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.
நேற்றுமுன்தினம் ஞாயிற்றுக்கிழமை மாலை இடம்பெற்ற இந்த விபத்தில் தூக்கி வீசப்பட்டுப் படுகாயமடைந்த சிறுவன் உடனடியாக மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதிலும், தீவிர சிகிச்சை பலனின்றி நேற்று திங்கட்கிழமை இரவு உயிரிழந்துள்ளார்.
இந்த விபத்தில் காயமடைந்த மேற்படி சிறுவனின் தந்தை வைத்தியசாலையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றார்.
விபத்துடன் தொடர்புடைய சிற்றூர்தியின் சாரதியைக் கைது செய்துள்ள பொலிஸார், இந்தச் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.


