உள்ளடக்கத்திற்குச் செல்க
நவம்பர் 2026
22 ஞாயிறு
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

பணம் வசூலித்தும், வாக்கு அறுவடை செய்தும் மாவீரரின் தியாகத்தை அவமதிக்க வேண்டாம்!

இலங்கை செய்திகள் 7 மணி நேரம் முன்
119 பார்வைகள்

மாவீரர்களின் உயரிய தியாகத்தையும் அர்ப்பணிப்பையும் பணம் வசூலிப்பதற்கும், தேர்தலில் வாக்கு அறுவடை செய்வதற்கும் சிலர் சுயநல ஆதாயங்களுக்காகப் பயன்படுத்துவது அந்த வீரர்களை அவமதிக்கும் மிகவும் மோசமான செயலாகும் என்று இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச்செயலாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான ஜனாதிபதி சட்டத்தரணி எம். ஏ. சுமந்திரன் தெரிவித்தார்.

வலிகாமம் தெற்கு பிரதேச சபையின் ஏற்பாட்டில் அமைக்கப்பட்ட மாவீரர் நினைவு வளாகத்தை நேற்று சனிக்கிழமை காலை சுடரேற்றித் திறந்து வைத்து உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் உரையாற்றுகையில்,

“இந்த வருடமும் வழமை போல் மாவீரர் வாரத்தை நாங்கள் இன்றிலிருந்து உணர்வுபூர்வமாக ஆரம்பிக்கின்றோம். வடக்கு, கிழக்கு பூராகவும் எங்களுக்காகப் போராடி மடிந்த போராளிகளை நினைவுகூருகின்ற வாரம் இது. நாங்கள் தொடர்ச்சியாகச் சொல்லி வருகின்ற ஒரே செய்தியைத்தான் இன்றைக்கும் சொல்ல வேண்டியதாக இருக்கின்றது.

தங்களுக்காக அல்லாமல், எங்களுக்காக, எங்கள் இனத்துக்காகத் தங்களுடைய உயிரைக் கொடுத்தவர்களை நாங்கள் என்றும் எங்களுடைய நினைவிலே வைத்திருப்போம். அவர்களை மறக்க மாட்டோம். அதற்கென்று ஏற்கெனவே ஒதுக்கப்பட்ட வாரத்திலேதான், அந்த நாள்களிலேதான் நாங்கள் அவர்களை இந்த விதமாக நினைவுகூருவோம்.

ஆனால், இந்த வாரத்திலே மட்டுமல்ல, எங்களுடைய உயிர் மூச்சு இருக்கின்ற வரைக்கும், எங்களை வாழ வைப்பதற்காகத் தங்களை மாய்த்தவர்கள், தாங்களாக முன்வந்து தங்களது உயிரைக் கொடுத்தவர்களை நாங்கள் தொடர்ச்சியாக நினைவிலே இருத்தி, அவர்களைப் போற்றி, எங்களுடைய இனத்தின் சரித்திரத்திலே மிகவும் தூயதான ஒரு காலமாக, ஒரு படலமாக அவர்களை நாங்கள் நினைவுகூருகின்றோம். அவர்களுடைய இந்தத் தியாகமும் அர்ப்பணிப்பும் ஈடு இணையற்றது.

இந்தத் தியாகத்தையும் அர்ப்பணிப்பையும் நாங்கள் இந்த விதமாக நினைவுகூருவது போல், பலர் இதை வேறு விதமான ஆதாயமாகத் தங்களுக்கு உபயோகிக்கின்றார்கள் என்பது உங்களுக்குத் தெரியும். பணம் வசூல் செய்வதற்கும், ஏன் தேர்தலிலே வாக்கு அறுவடை செய்வதற்கும்கூட இதனைப் பலர் பயன்படுத்துகின்றார்கள். அது மிகவும் மோசமான, இந்த வீரர்களை அவமதிக்கின்ற செயலாகத்தான் நாங்கள் பார்க்கின்றோம்.

ஆனால், சிலர் அப்படிச் செய்கின்றார்கள் என்பதற்காக நாங்கள் சரியான முறையிலே அவர்களை நினைவுகூரத் தவறக்கூடாது. இந்த உயரிய உச்சமட்ட அர்ப்பணிப்பை நாங்கள் எப்பொழுதுமே நினைவுகூருவோம், மறக்க மாட்டோம், அதைப் போற்றுவோம்.

விசேடமாக இன்றைக்கு இலங்கைத் தமிழரசுக் கட்சியாக, ஒரு தமிழ் சமூகமாக, அரசியலிலே எங்களுடைய மக்களுடைய விடுதலையைப் பெற்றுக்கொடுப்பதற்காக முன்னின்று செயற்படுகின்ற பிரதான அரசியல் இயக்கமாகவும்கூட, இறந்தவர்களுடைய இந்த அர்ப்பணிப்பும் தியாகமும் உயிர்த்தியாகமும் எங்களுடைய இந்த விடுதலைப் பயணத்திலே மிக முக்கியமான ஒரு பங்கை வகிக்கின்றது என்பதை நாங்கள் பதிவு செய்கின்றோம்.

இதே மாதத்திலேதான் இன்றைய ஆட்சியாளர்களும் தங்களுடைய கட்சியிலே இருந்து ஆயுதமெடுத்துப் போராடி மடிந்தவர்களை நினைவுகூருகின்றார்கள். சென்ற வாரம் ஜனாதிபதியும் ஜே.வி.பியின் பொதுச்செயலாளரும் வழமை போல் அந்த நினைவுகூரலிலே பங்குபற்றியிருந்தார்கள்.

ஆகவே, அவர்களும் ஒரு அரசியல் இலக்குக்காக ஆயுதமெடுத்துப் போராடி மடிந்தவர்களை வருடா வருடம் நினைவுகூருவதைப் போலவேதான், எங்களுடைய மக்களுடைய அரசியல் முடிவுக்காகத் தங்களுடைய உயிரைத் தியாகம் செய்த இந்த வீரர்களை நாங்களும் நினைவுகூருகின்றோம்.

இந்த வாரம் முழுவதும் இந்த நிகழ்வுகள் வடக்கு, கிழக்கு பூராகவும் நடைபெறும். இதிலே அனைத்துத் தமிழ் மக்களும் உணர்வுபூர்வமாகக் கலந்துகொள்ளுமாறு மிகவும் அன்பாகவும் விநயமாகவும் கேட்டுக்கொள்கின்றோம்.” – என்றார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

ஜனாசா எரிப்பு விவகாரத்தில் ஏற்பட்ட அரசியல் அதிருப்தியே தனித்த கட்சி உருவாகக் காரணம் – காதர் மஸ்தான்

ஜனாசா எரிப்பு விவகாரத்தில் ஏற்பட்ட அரசியல் அதிருப்தி உள்ளிட்ட பல்வேறு காரணங்களே தனித்த அரசியல் கட்சியை உருவாக்க வேண்டிய சூழலை ஏற்படுத்தியதாக முன்னாள் இராஜாங்க அமைச்சர் காதர்…

123 0 0
இலங்கை செய்திகள்

ஹட்டன் நகரில் தொடர் கொள்ளை!

இன்று காலை (22) ஹட்டன் நகரில் உள்ள பின் சாலையில் அமைந்துள்ள 4 கடைகளில் திருடன் புகுந்துள்ளதாக ஹட்டன் காவல்துறை தெரிவித்துள்ளது. தங்கப் பொருட்கள் தயாரிக்கும் 3…

115 0 0
இலங்கை செய்திகள்

மல்வத்தை கோர விபத்து: தீவிர சிகிச்சை பெற்று வந்த மற்றைய இளைஞரும் உயி@ரிழப்பு!

அம்பாறை மாவட்டம், சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மல்வத்தைப் பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை (20) மாலை இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் மற்றும் லொறி ஆகியன மோதிய கோர விபத்தில்…

127 0 0
இலங்கை செய்திகள்

நிந்தவூர் கடல் அனர்த்தம்: காணாமல் போன மற்றைய மாணவரின் சட@லமும் பொத்துவில் கோமாரி கடற்பரப்பில் மீட்பு 

அம்பாறை மாவட்டம், நிந்தவூர் கடற்கரையில் கடந்த வெள்ளிக்கிழமை (20) கடலில் நீராடச் சென்று அலையில் இழுத்துச் செல்லப்பட்டுக் காணாமல் போயிருந்த மற்றைய மாணவரின் சடலமும் நள்ளிரவு பொத்துவில்…

141 0 0