திறைசேரி நிரம்பி வழிந்தாலும் மக்கள் கையில் பணம் இல்லை : சஜித் விசனம்!
“திறைசேரி நிரம்பினாலும் மக்கள் கையில் பணம் நிரம்பவில்லை. மக்களிடம் பணப்புழக்கம் இல்லாமை பாரிய பிரச்சினையாகக் காணப்படுகின்றது” என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.
கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நேற்று சனிக்கிழமை மாலை நடைபெற்ற ‘கொழும்பு மோட்டார் கண்காட்சி’நிகழ்வில் பங்கேற்றதன் பின்னர், ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே எதிர்க்கட்சித் தலைவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,
“இளைய தலைமுறையை இனியும் யாராலும் ஏமாற்ற முடியாது. 2019 மற்றும் 2024 ஆகிய இரு ஆண்டுகளிலும் இந்த இளைஞர்கள் ஏமாற்றப்பட்டனர். இளைஞர்களுக்கு வெறுமனே வாக்குறுதிப் பத்திரங்களை வழங்குவதை விடுத்து, சுயமுயற்சியால் தொழில்முயற்சிகளைத் தொடங்குவதற்கான வாய்ப்புகளைப் பெற்றுக்கொடுக்க வேண்டும். இதற்காக மூலதனத்தைப் பெறும் வழியை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும்.
வரவு – செலவுத் திட்டத்தை முன்வைத்துப் பல்வேறு புள்ளிவிவரங்களைக் காட்டும் அரசு, இத்தகைய வாகனக் கண்காட்சிகளைப் பார்வையிட வேண்டும். கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் இத்தகைய கண்காட்சிகளில் மக்களின் பங்கேற்பு குறைந்த மட்டத்தில் காணப்படுகின்றது. திறைசேரி நிரம்பினாலும் மக்கள் கையில் பணம் நிரம்பவில்லை. மக்களிடம் பணப்புழக்கம் இல்லாமை பெரிய பிரச்சினையாகக் காணப்படுகின்றது. மக்கள் கையில் பணம் இல்லாமை வணிகச் சுழற்சி முடங்கும் நிலையாகும். ஆகவே, பொருளாதாரம் முன்னேற வேண்டுமெனில் மக்கள் கையில் பணம் புழங்க வேண்டும். தற்சமயம் மக்களிடம் பணம் இல்லை என்பது தெளிவாகத் தெரிகின்றது.
சொந்தமாக ஒரு வாகனத்தை வைத்திருப்பதே நாட்டில் பலரின் கனவாகக் காணப்படுகின்றது. ‘கொழும்பு மோட்டார் கண்காட்சி’ போன்ற கண்காட்சிகள் நடத்தப்படுவது முக்கியமான விடயமாக அமைந்துள்ளது. இதற்கு அப்பால் சென்று வாகன உற்பத்தித் தொழிலை நமது நாட்டுக் கொண்டுவர வேண்டும்.
இதற்குத் தேவையான முதலீட்டுக்கு உகந்த சூழல் நாட்டில் உருவாக்கப்பட வேண்டும். இதன் மூலம் வாகன விற்பனை மாத்திரமன்றி, வாகன உற்பத்தியையும் மேற்கொள்ள முடியும். வாகன உற்பத்தித் துறையில் ஒரு நாடாகப் பெரும் ஆர்வத்தைக் கவர முடியும்.” – என்றார்.














