உள்ளடக்கத்திற்குச் செல்க
நவம்பர் 2026
21 சனி
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

யானை – மனித மோதலைக் கட்டுப்படுத்துவதிலும் மட்டக்களப்பு புறக்கணிக்கப்படுகிறதா? – வெல்லாவெளி மக்கள் விசனம்!

இலங்கை செய்திகள் 5 நாட்கள் முன்
119 பார்வைகள்

மட்டக்களப்பு மாவட்டத்தின் பல பகுதிகளில் யானை – மனித மோதல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்ற நிலையில், வெல்லாவெளிப் பிரதேசத்தில் காட்டு யானைகளின் நடமாட்டம் குடியிருப்புப் பகுதிகளுக்குள் அதிகரித்துள்ளதால், மக்களின் வீடுகள், விவசாயப் பயிர்கள் சேதமடைவதுடன், மனித உயிர்களும் காவுகொள்ளப்படுவதாகப் போரதீவுப்பற்றுப் பிரதேச மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

பாராளுமன்ற உறுப்பினர்களின் 2026ஆம் ஆண்டுக்கான பன்முகப்படுத்தப்பட்ட வரவு – செலவுத் திட்ட நிதி ஒதுக்கீட்டின் கீழ் முன்னெடுக்கப்படும் அபிவிருத்தித் திட்டங்களை நேரில் பார்வையிட்டு மேற்பார்வை செய்வதற்காக வெல்லாவெளிப் பிரதேசத்திற்குச் சென்றிருந்த பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ சாணக்கியன் இராசமாணிக்கத்திடம் அப்பகுதி மக்கள் தமது பிரச்சினைகளை எடுத்துரைத்தனர்.

இதன்போது மக்களிடையே உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் தெரிவிக்கையில்:

“கடந்த வருடம் மட்டக்களப்பு மாவட்டத்திற்கு 96 கிலோமீற்றர் நீளமான யானை வேலி அமைப்பதற்கான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இருப்பினும், அந்தத் திட்டத்தின் கீழ் போரதீவுப்பற்று பிரதேசம் உள்வாங்கப்படவில்லை. இது தொடர்பாக நடைபெற்ற மாவட்ட மட்டக் கூட்டங்களில் போரதீவுப்பற்றுப் பிரதேச சபையின் தவிசாளர் மதிமேனன் அவர்கள் இப்பிரதேசம் உள்வாங்கப்படாமை குறித்து கேள்வி எழுப்பியதுடன், தனது கடுமையான எதிர்ப்பையும் பதிவு செய்திருந்தார்.

அதுமட்டுமன்றி, கடந்த வருடம் ஒதுக்கீடு செய்யப்பட்ட யானை வேலி அமைக்கும் பணிகள்கூட இதுவரையில் முழுமையாக நிறைவுசெய்யப்படவில்லை.

யானை – மனித மோதலைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளில்கூட இந்த அரசாங்கம் பிரதேசங்களுக்கு இடையில் பாரபட்சம் காட்டுகின்றதா என்ற கேள்வி எழுகின்றது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் வனஜீவராசிகள் திணைக்களத்தினால் ஏழு யானைக் கட்டுப்பாட்டு அலகுகளை (Elephant Control Units) அமைப்பதற்கான முன்மொழிவுகள் சமர்ப்பிக்கப்பட்டிருந்தன. அதன்படி வெல்லாவெளி, வவுணதீவு, பட்டிப்பளை, செங்கலடி, கிரான், வாகரை மற்றும் ஓட்டமாவடி ஆகிய ஏழு இடங்கள் அடையாளம் காணப்பட்டிருந்தன.

ஆனால், தற்போது அரசாங்கத்தினால் ஐந்து யானைக் கட்டுப்பாட்டு அலகுகள் மாத்திரமே வழங்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதில் வெல்லாவெளி மற்றும் கிரான் ஆகிய இரண்டு பகுதிகளும் நீக்கப்பட்டுள்ளன.

மட்டக்களப்பு மாவட்டத்தில் யானை – மனித மோதல் அதிகமாகக் காணப்படும் பகுதிகளைக் கருத்திற்கொண்டு, முன்மொழியப்பட்ட ஏழு அலகுகளையும் அமைப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இதேவேளை, கிழக்கு மாகாணப் பிராந்தியத்திற்கு (Eastern Region) மொத்தமாக 38 மோட்டார் சைக்கிள்கள் வழங்கப்பட்டுள்ளன. அவற்றில் ஐந்து மோட்டார் சைக்கிள்கள் மாத்திரமே மட்டக்களப்பு மாவட்டத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், ஏனைய 33 மோட்டார் சைக்கிள்களும் அம்பாறை மாவட்டத்திற்கு வழங்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

மேலும், மோட்டார் சைக்கிள்கள் வழங்கப்படுவதிலும் வெல்லாவெளி மற்றும் கிரான் ஆகிய பகுதிகள் புறக்கணிக்கப்பட்டுள்ளன.

ஏற்கனவே அம்பாறை மாவட்டத்தில் 14 யானைக் கட்டுப்பாட்டு அலகுகள் இயங்கி வருகின்ற நிலையில், புதிதாக மேலும் ஒன்பது அலகுகள் வழங்கப்படுவதன் மூலம் அங்கு மொத்தம் 23 அலகுகள் அமையவுள்ளன. ஆனால், மட்டக்களப்பு மாவட்டத்திற்கு முன்மொழியப்பட்ட ஏழு அலகுகளில் இரண்டு நீக்கப்பட்டு ஐந்து அலகுகள் மாத்திரமே வழங்கப்படவுள்ளன.

கிழக்கு பிராந்தியம் என்பது மட்டக்களப்பு மற்றும் அம்பாறை ஆகிய இரு மாவட்டங்களையும் உள்ளடக்கியதாகும். எனவே, இவ்விரு மாவட்டங்களுக்கும் அந்தந்தப் பகுதிகளில் நிலவும் தேவைகளின் அடிப்படையில் வளங்கள் சமத்துவமாகவும் நியாயமான முறையிலும் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும் என்பதே எமது கோரிக்கையாகும்.

ஜனாதிபதியினால் அறிவிக்கப்படுகின்ற வேலைத்திட்டங்களைக்கூட நடைமுறைப்படுத்துவதில் இவ்வாறான இழுபறி நிலை காணப்படுகின்றபோது, மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வைப் பெற்றுக்கொடுப்பதில் நாம் எவ்வாறு முன்னேற முடியும்?” எனத் தெரிவித்தார்.

இந்நிகழ்வுகளில் போரதீவுப்பற்றுப் பிரதேச சபையின் தவிசாளர் வி. மதிமேனன், உப தவிசாளர் த. கயசீலன், உறுப்பினர்களான அ. பிறேமாகரன், ம. கோபிநாத், த. வரதராஜா, இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் வட்டார உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

நிந்தவூர் கடலில் காணாமல் போன இளைஞர்கள் இருவரையும் தேடும் பணிகள் தீவிரம்!

அம்பாறை மாவட்டம், நிந்தவூர் கடற்கரையில் இன்று (20) மதியம் கடலில் நீராடச் சென்றவர்களில் திடீரென அலையில் இழுத்துச் செல்லப்பட்டவர்களுள் ஒருவர் உயிருடன் மீட்கப்பட்டு அம்பாறை பொது வைத்தியசாலையின்…

137 0 0
இலங்கை செய்திகள்

மோட்டார் சைக்கிளும் லொறியும் மோதி கோர விபத்து: 23 வயது இளைஞன் உயி@ரிழப்பு

அம்பாறை மாவட்டம், சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மல்வத்தைப் பகுதியில் இன்று (20) வெள்ளிக்கிழமை மாலை இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் மற்றும் லொறி ஆகியன மோதிய கோர விபத்தில்…

128 0 0
இலங்கை செய்திகள்

மூச்சுத் திணறல் காரணமாக 36 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி!

மூச்சுத் திணறல் காரணமாக மஸ்கெலியா புனித ஜோசப் தேசிய பாடசாலையின் 36 மாணவர்கள் இன்று (20) மஸ்கெலியா பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இன்று (20) காலை 8.45…

124 0 0
இலங்கை செய்திகள்

யாழில். திறந்தவெளியில் குப்பை எரிப்பு – நீதிமன்றில் விரிவான அறிக்கை சமர்ப்பிக்கப்படும் என அறிவிப்பு

யாழ்ப்பாணம் மாநகர சபை அதிகார எல்லைக்குள் திறந்தவெளியில் குப்பைகள் எரிக்கப்படுவது தொடர்பிலான விரிவான அறிக்கையொன்றை எதிர்வரும் காலத்தில் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கவுள்ளதாக, அந்நகர சபையின் சார்பில் ஆஜரான சட்டத்தரணி…

134 0 0